1. திருமுருகாற்றுப்படை: முருகக் கடவுளைப் பற்றிய ஆற்றுப்படை ஆதலின், ‘திரு’ சேர்த்து இதனைச் சைவ சமயத்தவர் போற்றிவருகின்றனர். பல ஆண்டுகளாக இதனைச் சைவ சமயத்தவர் மனப்பாடம் செய்து வருகின்றனர். பத்துப்பாட்டில் முதலில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலை, பதினோராம் திருமுறையில் சேர்த்துச் சிறப்பித்துள்ளனர். இதனைத் தனியாக ஓதும் பழக்கம் இருந்து வருகின்றது. இதன் கீழ், பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்த பத்து வெண்பாக்கள் உள்ளன. அவற்றில், பிள்ளையார் இடம் பெறுவதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் அவை தோன்றின என்பது வெளிப்படை திருமுருகாற்றுப்படையினுள் விநாயகர் இடம்பெறவில்லை. ஆதலின் இது ஏழாம் நூற்றாண்டிற்கு முன் தோன்றியது என்பது உறுதி. சைவர்கள் பாராயணம் செய்து நாள்தோறும் வழிபாட்டில் ஓதுகின்ற சிறப்புடைய திருமுருகாற்றுப் படை, அடியவர்களின் மனக்கவலையை நீக்கும் மருந்தாகி வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் என்று போற்றப்படுகின்றது. நக்கீர் தாம்உரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி, தான்நினைத்த எல்லாம் தரும். இவ்வாறு சைவ அன்பர்களால் போற்றப்படும் இப் பாடல் உரைவளம் கொண்ட சிறப்புடையது. நச்சினார்க்கினியர்க்குமுன் இதற்கு நான்கு உரைகள் தோன்றியுள்ளன. பரிமேலழகர் உரை: சென்னை நகரில் தோன்றிச் சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்க, பல அரிய தமிழ் நூல்களை வெளியிட்டு வருகின்ற சைவ சித்தாந்த மகாசமாஜம், பல ஆண்டுகளுக்கு முன், பரிமேலழகர் உரை என்ற பெயரோடு திருமுருகாற்றுப் படைக்குப் பழைய உரை ஒன்றினை வெளியிட்டது. இதனை இயற்றியவர் பரிமேலழகர் அல்லர் என்பர் ஆராய்ச்சியாளர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், பத்துப்பாட்டு மூன்றாம் பதிப்பில், அடிக்குறிப்பாக இவ்வுரையைச் சேர்த்து ‘வேறுரை’ என்று குறிப்பிட்டுள்ளார். பரிமேலுழகர் பெயரால் வழங்கிவரும் இந்தப் பழையவுரை பல வகையில் சிறப்புடையது. செறிவும் நுட்பமும் வாய்ந்தது; நல்ல தமிழ் நடையில் ஆனது; அடிதோறும் பதவுரை கூறிக் கீழே அருஞ் சொல் விளக்கம், வினைமுடிபு, இலக்கணக் குறி்ப்பு ஆகியவற்றைத் தருவது. |