இந்த உரையை, அரிமேல் அழகுறூஉம் அன்பமை நெஞ்சப் பரிமே லழகன் பகர்ந்தான்-விரிவுரைமூ தக்கீரிஞ் ஞான்று தனிமுருகாற் றுப்படையாம் நக்கீரன் நல்ல கவிக்கு என்ற வெண்பா போற்றுகின்றது. உரையாசிரியர் உரை: திருமுருகாற்றுப் படைக்கு ‘உரையாசிரியர் உரை’ என்ற பெயருடன் பழைய உரை கிடைத்தது. இதனை மதுரைத் தமிழிச் சங்க வெளியீடாக (1943) ஆராய்ச்சி அறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை சிறந்த ஆராய்ச்சி முன்னுரையுடன் பதிப்பித்துள்ளார். இந்த உரையாசிரியர் உரைக்கும் இளம்பூரணர்க்கும் எவ்வகையிலும் தொடர்பில்லை. இவ்வுரையை நச்சினார்க்கினியர் ‘வசிந்துவாங்கு நிமிர்தோள்’ (முருகு-106) என்ற அடிக்கு உரை எழுதும்போது, “வளைய வேண்டுமிடம் வளைந்தும் நிமிர வேண்டுமிடம் நிமிர்ந்தும் என்றும் உரைப்பர்” என்று குறிப்பிடுகின்றார். இவ்வுரையின், சிறப்பியல்பைப் பின்வருமாறு வையாபுரிப் பிள்ளை போற்றுகின்றார்: “இஃது ஒரு சிறந்த பழைய உரையாகும். யாவரும் அறியக் கூடியபடி மிகவும் எளிமையான நடையில் எழுதப் பெற்றிருக்கிறது. மாட்டு முதலிய இலக்கணத்தால் அடிகளைச் சிதைத்து அலைத்துப் பொருள் பண்ணாதபடி சொற்கிடக்கை முறையிலேயே பெரும்பாலும் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆற்றுப் படையைக் கற்போர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.” முன்னர்க் குறிப்பிட்ட பரிமேலழகர் உரையுடன் இந்த உரை பெரிதும் ஒத்துள்ளது. இவையேயன்றி வேறு இரண்டு பழைய உரைகளும் கிடைத்துள்ளன. தமிழ்த் தொண்டர் வே. ரா. தெய்வ சிகாமணிக் கவுண்டர் கவிப் பெருமாள் உரையையும் பரிதி குறிப்புரையையும் கண்டெத்து வழங்கியுள்ளார். இவை (1959 ஆம் ஆண்டு), திருப்பனந்தாள் ஆதீனம் வெளியிட்ட திருமுருகாற்றுப்படை உரை வளம் (ஐந்து பழைய உரைகள்: நச்சினார்க்கினியர், பரிமேலழகர், உரையாசிரியர், கவிப்பெருமாள், பரிதி) என்ற நூலில் இடம் பெற்றுள்ளன: |