பக்கம் எண் :

உரையாசிரியர்கள்316

     கவிப்பெருமாள் உரை: இது அடிகளின் பொருள் தொடர்பு
நோக்கி வரையறுத்துப் பொழிப்புரையாக அமைந்துள்ளது. கீழே விளக்கமும்
இலக்கணக் குறிப்பும் தரப்பட்டுள்ளன. ஆற்றொழுக்காய்-இனிய ஓசையுடன்
செல்லுகின்றது.

     இவ்வுரையைப் பின்வரும் வெண்பா பாராட்டுகின்றது:

    வண்டமிழ்தேர் கீரன் வளமறையாய்ச் சேந்தன்மேல்
    தண்டமிழ்ஆற் றுப்படையாத் தானுரைத்தான் -
                                   ஒண்டமிழின்
    தெய்வக் கவிப்பெருமாள் தேன்போல் உரைசெய்தான்
    கைவந்த நூன்முறைமை கண்டு.

    பரிதி உரை: இது, அருஞ் சொற்களுக்குப் பொருள் கூறும்
குறிப்புரையாகும். இப்போது கிடைக்கின்ற உரைகளில் காலத்தால் இது
முற்பட்டதாக இருக்கலாம். தேவையான இடங்களில் மிகச்சுருக்கமாய்
இலக்கண விளக்கம் தருகின்றது. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் திறனை
இவ்வுரை முழுதும் காணலாம்.

     இந்த உரையைப் பின்வரும் வெண்பா பாராட்டுகின்றது:

    நக்கீரர் தாம்செய்த நன்முருகாற் றுப்படைக்குத்
    தக்கவுரை சொன்ன தகுதியான் - மிக்குலகில்
    பன்னூல் அறிந்த பரிதி மறைப்புலவன்
    தொன்னூல் அறிவால் துணிந்து.

உரை வேற்றுமை

    திருமுருகாற்றுப் படைக்கு ஐந்து பழைய உரைகள் இருப்பதால் அவற்றை
ஒப்பிட்டுக் காண்பது அறிவுக்கு விருந்தாய் உள்ளது: ஆராய்ச்சிக்குத்
தூண்டுகோலாய் உள்ளது.

    மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
    குன்றுதோறு ஆடலும் நின்றதன் பண்பே

என்ற அடிகளில் உள்ள ‘தலைத் தந்து’ என்ற தொடர் பலவாறு
விளக்கப்பட்டுள்ளது. அவற்றைக் காண்போம்:

     நச்: முதற்கை கொடுத்து.

     பரிமே: அவ்விடத்து வந்து

     உரையா: அவர்கள் (மகளிர்) களவறிந்து அவர்கட்கு இருப்பிடம்
கொடுத்து.

     கவி: தானும் ஒரு தலையிலே கை கோத்து.

     பரிதி: ஒருத்தியை எடுத்து ஒருத்திமேல் போட்டு.