இவ்வுரைகளுள் உரையாசிரியர் உரை மிகவும் பொருத்தமாய் உள்ளது. முற்காலத்து வழக்கத்தை அறிந்து எழுதிய விளக்கமாய் உள்ளது. இந்த அரிய விளக்கம் வேறு உரையாசிரியர்களால் (புறம் - 24, பழைய உரை) கூறப்படவில்லை. பழமுதிர்சோலை (முருகு - 317) என்பது, பழம் + உதிர் + சோலை என்றும், பழம் + முதிர் + சோலை என்றும் இரு வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ள இடம் தருகின்றது. முற்காலத்து உரையாசிரியர்கள் இரு வகையாகவும் பொருள் கொண்டுள்ளனர்: நச்: பழம் முற்றின சோலை பரிமே: பழம் முதிரும் சோலை உரையா: நற்கனிகள் உதிரப்பட்ட சோலை கவி: பழங்கள் முற்றப் பெற்ற சோலை பரிதி: முதிர்ந்த பழங்கள் பொருந்திய சோலை. திருமுருகாற்றுப்படை மிகவும் சிறப்பு வாய்ந்த அழகான உவமையுடன் தொடங்குகின்றது. இந்த உவமை இலக்கிய உலகத்தின் இமயம்; அணிகளுக்கு அரசு; கற்பனையின் தலைமையிடம்; புலமையின் விளைநிலம். நீலத்தோகையை விரித்து நின்று ஆடும் பச்சை மயிலின்முன் நிற்கும் குமரக் கடவுளின் தோற்றத்தைப்பாடும் நக்கீரர், உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு (1-2) என்று உள்ளக்களிப்போடு-பேரின்பக் காட்சியைப் பாடுகின்றார். உலகமெல்லாம் உவகை கொள்ளுமாறு இளங்கதிர் கடலில் தோன்றியதுபோல என்று உவமை கூறுகின்றார். இளஞாயிறு முருகனுக்கும், நீலக்கடல் மயிலுக்கும் உவமையாகின்றன. இக்காட்சியைப் பலவேறு உரையாசிரியர்கள் பல வகையாய் விளக்குகின்றனர். நச்: சீவான்மாக்கள் உவப்ப எழுந்து, மகாமேருவை வலமாகத் திரிதலைச் செய்யும் எல்லாச் சமயத்தாரும் புகழும் ஞாயிற்றைக் கடலிடத்தே கண்டாற்போல. உரையா: உலகத்திலுள்ள பல்லுயிர்களும் மகிழ மேருவை வலமாக, யாவர்க்கும் நேராகச் சுழலும் தனது ஒளியாற் |