காண இயலாது” என்று ஆசிரியர் உரைகளின் இன்றியமையாமையினை உவமை காட்டி இனிது புலப்படுத்தியுள்ளது மனங்கொள்ளத்தக்கது. மேலும் “நூலாசிரியரின் உள்ளக் கருத்தினை நுணுகி ஆராய்ந்து, தெளிவு பெற எடுத்து எழுதும் வன்மையாளராய் உரையாசிரியர்கள் விளங்கினர்; யார் யார் எவ்வெத் துறை நூல்களில் மிகுதியான பயிற்சி பெற்றிருந்தனரோ அவரவர் அவ்வத்துறை நூல்களுக்கு உரை எழுதினர், கல்லாத மேற்கொண்டு ஒழுகாமல் கசடற வல்லதையே உலகிற்கு உணர்த்தி நின்றனர். ஒன்றே செய்து அதனையும் நன்று செய்து இறவாப்புகழ் பெற்றனர். மொழி உள்ளளவும் தம் பெயரை நிலைநாட்டிச் சென்றனர்” என்று இந் நூலாசிரியர், உரையாசிரியர் தம் பணிக்குச் செம்மையான தகுதிச் சான்று வழங்கியுள்ளார். ‘உரை செய்யும் உதவி’ என்னும் தலைப்பில் ஆசிரியர் காட்டும் சீரிய காரணங்கள் அறிஞருலகு ஏற்றுக்கொள்ளும் சான்றுகளாம். மேலும் தக்கயாகப்பரணி உரையாசிரியர், தம் உரையில் (தக்க-54) ‘சிலம்பிபொதி செங்காய்’- இது குறுந்தொகை எனக் கூறுகின்றால். “இப்பாடல் மறைந்து விட்டது” என்று ஆசிரியர் அரிய செய்திகளை ஆராய்ச்சியின் மூலம் அகழ்ந்தெடுத்துவந்து தருவது பாராட்டத் தக்கது. இறையனார் அகப்பொருள் உரை, இளம்பூரணர் உரைநடை தொடங்கி, சிவஞான முனிவர் உரைநடை, ஆறுமுக நாவலர் உரைநடை இறுதியாக ‘உரையாசிரியர்களின் உரைநடை’ என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்து கூறுகின்றார். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரை இவர் நன்கு ஆராய்ந்துள்ளார். வரலாறும் சிறப்பியல்புகளும், காலம், வான்புகழ், நச்சர் - நச்சினார்க்கினியரா? முதலில் உரை எழுதிய நூல், உரையின் இயல்பு, மாட்டு, இலக்கியப் புலமையும் நினைவாற்றலும், முரண்பாடு, நெடுநல்வாடை திணை, பாரதக்கதை, ஆராய்ச்சிதிறன், உடம்படுமெய், நச்சினார்க்கு இனியரா? நடுவு நிலைமை, தம் கருத்தே சாதித்தல் முதலிய தலைப்புக்களில் நச்சினார்க்கினியரை விரிவாகக் காய்தல் உவத்தல் இன்றி விளங்க ஆராய்ந்துள்ளார். அதே நேரத்தில் “தமிழ் இலக்கண நூலுக்கு உரை எழுதப் புகுந்த நச்சினார்க்கினியர், வடமொழியில் உள்ள வேதநெறியையும், குலமுறைக் கோட்பாட்டையும் தம் உரையில் புகுத்தித் தமிழ் மக்களின் பண்பாட்டிற்கு மாசு ஏற்படுத்தியதை நினைத்துத் துன்புறும் தமிழ் நெஞ்சங்கள் பலவாகும்” என்று கூறி ஆசிரியர் தம் ‘குணம்நாடிக் குற்றமும் நாடும்’ பண்பினைப் புலப் |