படுத்தியுள்ளார். ஆராய்ச்சிக்கு இன்றியமையாத பண்பு இது. “நச்சினார்க்கினியர் நினைவாற்றல் மிகுந்தவர்; நூலின் முன்னும் பின்னும் நோக்கி மாறுபாடு ஏற்படா வண்ணம் உரை எழுதுவார்: நூலாசிரியர் கருத்தை நுணுகி நோக்கி அறிந்து போற்றுபவர்; அக்கருத்தினை மறவாமல் பல இடங்களிலும் வெளிப்படுத்துபவர்” என்றும் ஆசிரியர் எழுதும் வரிகளில் அவர்தம் நடுநிலை சார்ந்த நன்னெஞ்சத்தினை அறியமுடிகின்றது. ‘பல்கலைப் புலமை’ என்ற தலைப்பில் நச்சினார்க்கினியர்தம் இலக்கியப் புலமை, வடமொழிப் புலமை, சமயநூல் அறிவு, நிலநூல் அறிவு, வாழ்வியல், உயிரியல், அகராதிக் கலைஞராய் விளங்கும் தன்மை, நோக்கு முதலியவற்றின் விளங்க எடுத்துரைத்துள்ளார். பத்துப்பாட்டு உரைகள், பதினென் கீழ்க்கணக்கு உரைகள், நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்கள், திருமுறைகளின் உரைகள், சைவ சாத்திர உரைகள், இலக்கண உரைகள் என்ற பகுதிகள் மிகவிரிந்த சிறந்த ஆராய்ச்சிகளாகும். பரிமேலழகர் பற்றித் தம் நுண்மாண் நுழைபுலம் விளங்கும் வண்ணம் ஆசிரியர் ஆராய்ந்து காட்டியுள்ளார்; “பரிமேலழகர் உரை திட்பநுட்பம் வாய்ந்த, கருத்துச் செறிவு உள்ளதாய், பலமுறை கற்றுத் தெளிந்தவரும் முறையாகப் பாடம் கேட்டறிய வேண்டியதாய் இருக்கின்றது” என்று ஆசிரியர் உரைக்கும் செய்தி பாராட்டற்பாலது. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர் என்ற தலைப்பில் நல்ல செய்திகளை ஆசிரியர் முயன்று தேடித்தந்துள்ளார். “சின்னஞ்சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் தோன்றி வளர்வதுபோல், உரையாசிரியர்கள் தம் உரைகளிற் காட்டியுள்ள சிறிய பாடல் ஒன்றிலிருந்து பெரிய கதையோ, கருத்தோ பின்னால் வளர்ந்திருக்கிறது” என்று ஆசிரியர் எழுதும் தொடர் நடைமுடையதோடு கருத்தாழமும் கொண்டதாகும். ‘பதிப்பாசிரியர்கள்’ என்ற தலைப்பு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரண் செய்வதாகும். மறைந்து போன உரை நூல்களை ஆசிரியர் நன்கு ஆராய்ந்து கண்டுள்ளார். நூலின் அழகுக்கு அழகு செய்வது போன்று ஆங்கில மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும் அமைந்து நூல் நன்கு மதிக்கத்தக்கதாய்த் துலங்குகின்றது. ஆசிரியர் தெள்ளிய சிறந்த நடையில் நூலினை ஆக்கியுள்ளார். ‘உரையாசிரியர்கள்’ பற்றிய |