பக்கம் எண் :

33

இந்நூல் தமிழ்த்தாய்க்கு நல்லதோர் அணிகலனாகும். உரையாசிரியர் பற்றிய
செய்திகள் அனைத்தையும் இந்நூலில் ஆசிரியர் தொகுத்தளித்துள்ளார்.
ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்குவோருக்கு இந்நூல் அருமையும்
பெருமையும் கொண்டு திகழ்வதாகும்.

     இந்நூலை யாத்த திரு. மு. வை. அரவிந்தன், தமிழ்ப் புலமையும்
நெஞ்சமும் வாய்ந்தவர்; ஆராய்ச்சித்திறன் நன்கு வாய்க்கப்பெற்றவர்;
எடுத்துக்கொண்ட பொருளை இனிது காண்கின்றவர்; ஆராய்ச்சியாளார்க்கு
வேண்டிய நடுவுநிலைமை நன்கு வாய்க்கப்பெற்றவர். நுண்மாண் நுழைபுலம்
வாய்ந்து அரிதின் முயன்று ஆராய்ந்த நல்லதொரு ஆராய்ச்சி நூலினைத்
தமிழ்கூறு நல்லுலகிற்கு ஆசிரியர் வழங்கியுள்ளார். ஆசிரியர்தம் முயற்சித்
திறன் வெல்வதாக! தமிழுலகம் இந்நூலினை ஏற்றுப் போற்றிப் பயன்பெறும்
என்னும் துணிபுடையேன்.

சி. பாலசுப்பிரமணியன்