பக்கம் எண் :

உரையாசிரியர்கள்328

     பாரி மகளிரை விச்சிக்கோனிடம் கொண்டு சென்று ஏற்றுக்
கொள்ளுமாறு வேண்டிய பாடல் (200) பரிசில் துறை என்பது பொருந்துமா
என்ற வினாவுக்கு மிகநயமாக விடை கூறுகின்றார் இவ்வுரையாசிரியர்.
“உலகத்து மகட் பேசிவிடக் கொடுத்தலை அன்றி, தாமே இவரைக்
கொள்வாயாக என்று இரந்து கூறினமையின், இது பரிசில் துறையாயிற்று”
என்பது இவர் தரும் விளக்கம்.

     இத்தகைய பல சிறப்பியல்புகளையுடைய இப் பழைய உரை 266
பாடல்களுக்கு மட்டுமே உள்ளது. 267 முதல் 400 வரை உள்ள பாடல்களுக்கு
டாக்டர் உ.வே.சா. குறிப்புரையும் சிறு விளக்கமும் எழுதி வெளியிட்டார்.
பின்னர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை நூல் முழுமைக்கும் சிறந்த உரை
விளக்கம் எழுதியுள்ளார். இவ்வுரை பொருத்தமான பாடல்களை ஆராய்ந்து
தருகின்றது. வரலாற்றுச் செய்திகளையும், சங்க காலத்து மக்கட் பெயர், ஊர்
நாடுகளின் பெயர் ஆகியவற்றைக் கல்வெட்டுகளின் உதவி கொண்டு
தெளிவுபடுத்துகின்றது. புலவர் வரலாற்றையும் மன்னர்களின் வரலாற்றையும்
விரிவாக ஆராய்ந்து உரைக்கின்றது.

3. பதினெண் கீழ்க்கணக்கு உரைகள்

    பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள பல நூல்கள், வச்சிர நந்தி மதுரையில்,
நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த காலத்தில் தோன்றியவை
என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

     ‘பன்னிரு படலம்’ கீழ்க்கணக்கைப்பற்றி

    அடிநிமிர் வில்லாச் செய்யுள் தொகுதி
    அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
    திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்
   

என்று கூறுகின்றது. கணக்கு என்ற சொல்லுக்கு நூல் என்பது பொருள். கீழ்
என்பது, பாடலின் குறுகிய அளவைக் குறிக்கின்றது.

     ‘வனப்பியல்தானே’ என்ற தொல்காப்பிய (செய்யுளியல்) நூற்பாவில்,
பேராசிரியர் ‘கீழ்க் கணக்கு’ நூல்களைக் குறிப்பிடுகின்றார்.

     பதினெண் கீழ்க்கணக்கின் பெயர்களை,

    நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
    பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்