இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு என்னும் பழைய வெண்பா குறிப்பிடுகின்றது. இந்தப் பாடலில் உள்ள நூலின் பெயர்களை 1885-இல் சி.வை.தாமோதரம் பிள்ளை ஆராயத் தொடங்கினார். அவர் தொடங்கி வைத்த ஆராய்ச்சி வளர்ந்தது. பலர் பங்கு கொண்டனர். முப்பால் என்பது எது? திருக்குறளா? கடுகம் என்பதற்கு அடை மொழியா? இன்னிலை, கைந்நிலை என்பவை தனித்தனி நூல்களா? “இன்னிலை சொல்” என்பது காஞ்சிக்கு அடைமொழியா? இரண்டும் நூல்கள் ஆயின், அவை எங்கே? இத்தகைய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது ‘இன்னிலை’ என்ற பெயருடன் புதியாய் ஒரு போலி நூல் தோன்றிப் பழையநூல் போல் மருட்டியதால், வ.உ.சி. யால் அஃது உரையுடன் பதிப்பிக்கப்பட்டது. காலம் செல்லச் செல்லத் தெளிவு பிறந்தது. முப்பால் என்பது திருக்குறளே என்று முடிவு செய்யப்பட்டது. இன்னிலை என்பது ‘காஞ்சி’க்கு அடைமொழி என்பது தெரிந்தது. கைந்நிலை என்பது பழைய நூல் என்பதை, தொல்காப்பியம் இளம்பூரணர் உரை அறிவித்தது. அவ்வுரை கைந்நிலைக்குரிய சில வெண்பாக்களை மேற்கோள்காட்டி இருப்பதை அறிந்து, அந்த நூல் ஐந்திணை கூறும் அகப்பொருள் நூல் என்று தெளிய முடிந்தது. அதனால் ‘இன்னிலை’ பிற்காலத்துப் பொய்ந்நூல் என்பது உறுதியாயிற்று. இனி, மேலே உள்ள வெண்பா கூறுகின்ற 18 நூல்களின் பெயர்களைக் காண்போம்: 1. நாலடி - நாலடியார் 2. நான்மணி - நான்மணிக்கடிகை 3.6. நானாற்பது - இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது. 7.10. ஐந்திணை - திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது. 11. முப்பால் - திருக்குறள் 12. கடுகம் - திரிகடுகம் 13. கோவை - ஆசாரக் கோவை 14. பழமொழி - பழமொழி நானூறு 15. மாமூலம் - சிறுபஞ்சமூலம் |