நானூற்று வண்ணம்’ என்பது மறைந்துபோன நூலாக இருக்கலாம். இதனை வலிமையான சான்றாகக் கொள்ள இயலாது. நாலடியாரைப் பயில்பவர், அது ஒரு தொகை நூல் என்பதை எளிதில் உணர்வர். அதில் உள்ள பாடல்கள் வேறு வேறு நடையின; பல வேறு வகையான சொல்லமைப்பின; கருத்துத் தொடர்ச்சி உடையவை அல்ல. நக்கீரர் என்ற பெயர், சமண சமயத்தவர்க்கு உரியதன்று. நாலடியாரில் தொட்ட இடமெல்லாம் சமணக்கருத்துகள் உள்ளன. ஆதலின், அதனை நக்கீரர் இயற்றினார் என்று கருத இயலாது. உரைகள் பதினெண் கீழ்க்கணக்குகளில், திருக்குறளுக்கு அடுத்த படியாக அறிஞர் பெருமக்களின் பாராட்டுதலைப்பெற்ற நீதி நூல் நாலடியாராகும். இந் நூலுக்கும் காலந்தோறும் பலப்பல உரைகள் தோன்றியுள்ளன. நாலடியாருக்குப் பழைய உரைகள் மூன்று உள்ளன. ஒன்று பதுமனார் இயற்றியது. மற்றொன்று, தருமர் செய்தது. இன்னொன்று, பெயர் அறியப்படாத ஒருவர் செய்தது. பதுமனார் நாலடியாருக்கு முதன் முதலில் உரைகண்டவர் பதுமனார். பத்மம் என்ற சொல்லுக்குத் தாமரை என்பது பொருள். பதுமம் என்ற சொல்லின் திரிபு அது. பதுமம் என்ற பெயரினடியாகப் பிறந்த பெயரே பதுமனார் என்பது. பதுமனாரின் வரலாறுபற்றி அறியத்தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. நாலடியாரில் உள்ள நானூறு வெண்பாக்களையும் பொருள் அறிந்து ஓதி உணர்ந்து, திருக்குறளைப் பின்பற்றி அதிகாரம் தோறும் பத்துப்பாடலை அமைத்து அதிகாரங்களுக்கு ஏற்ற பெயரிட்டவர் பதுமனாரே. மேலும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பெரும்பகுதியாக்கி, அவற்றில் பல இயல்களை அமைத்து உரை இயற்றிய வரும் இவரே. பதுமனார் நாலடியாருக்கு அதிகாரம் வகுத்த செய்தியைத் தருமர் தம் உரைச் சிறப்புப் பாயிரத்தில். |