உள்ளன. கருத்துச் செறியும் இலக்கண வழுவற்ற நடையும், தனித்தமிழ்ச் சொல்லாட்சியும் பதுமனாரிடம் காணலாம். சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதில், இவர் வல்லவராக விளங்குகின்றார். தருமர் தருமர் பதுமனாருக்குப்பின் நாலடியாருக்கு உரை எழுதியவர். உரைப்பாயிரத்தில் இவர் பதுமனாரைக் குறிப்பிடுகின்றார். திருக்குறள் உரையாசிரியர்களில் ‘தருமர்’ குறிப்பிடப்படுகின்றார். இருவரும் ஒருவரா அல்லது வேறுபட்டவரா என்று அறிய, திருக்குறள் தருமர்உரை கிடைக்கவில்லை. பதுமனார் உரைக்கு விரிவுரையாகத் தருமர்உரை உள்ளது. பாடலுக்குப் பொழிப்புரை இயற்றியபின் மிகவிரிவாக நயமும் பொருளும் கூறுகின்றார். தருமர் உரைப்பாயிரம் நாலடியாரைப் பற்றியும், பதுமனாரைப்பற்றியும் விளக்கமாகக் குறிப்பிடுகின்றது. நாலடியார் பாடல்கள் இயற்றிய முனிவர்களை, வளங்கெழு திருவொடு வையகம் முழுதும் உளங்குளிர் இன்பத்து இன்பம் உவப்ப வண்பெருஞ் சிறப்பின் மாதவம் புரிந்தாஅங்கு எண்பெருங் குன்றத்து இருந்தவ முனிவர் என்று பாயிரம் குறிப்பிடுகின்றது; சமண முனிவர்கள் தவம் புரிந்துகொண்டு எண்பெருங் குன்றத்து இருந்ததைக் கூறுகின்றது. அம் முனிவர்கள் எண்ணாயிரம் வெண்பாக்கள் இயற்றியதாய்ப் பாயிரம் கூறுகின்றது: அறம்பொருள் இன்பம் வீடுஎனும் அவற்றின் திறம்பிறர் அறியும் திறத்தை நாடிப் பண்புற எடுத்துப் பாங்குறப் பகர்ந்த வெண்பா வியல் எண்ணாயிரம். இவ் எண்ணாயிரம் பாடல்களில், பல பாடல்கள் மறைந்து காலப் போக்கில் நானூறு பாடல்களே எஞ்சி நின்று வாழ்வுபெற்றன என்பதைப் பாயிரம், .....எண்ணாயிரம் இவற்றுள் பார்எதிர் கொண்டு பரவி ஏத்த நீர்எதிர் வந்து நிரையணி பெற்ற மேல்நூல் தகையின் விதிமுறை பிழையாஅ நானூறு என்று கூறுகின்றது. |