பக்கம் எண் :

335ஆய்வு

     நானூறு பாடல்களைப் பதுமனார் நயந்தெரிந்து ஓதி நாற்பது
அதிகாரங்கள் வகுத்ததை,

    நானூறு அவற்றின் நயந்தெரிந்து ஓதிய
    மதுமலர்த் தண்டார்ப் பதுமன் தெரிந்த
    ஐயமில் பொருண்மை அதிகாரம் தாம்
    மெய்யா நலத்த எண் ஐந்து

என்று பாயிரம் உரைக்கின்றது.

     தருமனார் நாற்பது அதிகாரங்களையும் பாகுபடுத்தியதை

          ....எண் ஐந்து அவற்றுள்
         அறவியல் பதின்மூன்று; அரசர்க்கு உரிய
         பொருளியல் இருபத்து ஒருநான்கு; இன்பம்
         ஆன்ற வகையை மூன்றுஎன மொழிந்தனன்
         சான்றோர் ஏத்தும் தருமத் தலைவனே

என்று கூறி முடிக்கின்றது பாயிரம்.

     தருமரைப் பற்றி

         சீல முனிவர் இருந்து தெரிந்துரைத்த
         நாலடி நானூற்றின் நற்பொருளைப் - பால்வகையே
         கண்டான் பொருள்தான் பயனுரைத்தான் காதலித்துத்
         தண்டார்ப் பொறைத்தருமன்  தான்

என்ற வெண்பா ஒன்றும் உள்ளது.

விளக்கவுரை

    பதுமனார், தருமர் உரைகளேயன்றி நாலடியாருக்கு வேறோர் உரையும்
உள்ளது. அவ்வுரை இயற்றிவர் பெயர் தெரியவில்லை. அவ்வுரையை
வெளியிட்ட சரசுவதி மகால் விளக்கவுரை என்ற பெயரைத் தந்துள்ளது.

     விளக்கவுரை, பதுமனார் தருமர் ஆகிய இருவர் உரைகளையும் தழுவி
எழுதப்பட்டுள்ளது. இவர், மற்ற இரு உரையாசிரியர்கள் கருத்திலிருந்து
வேறுபட்டு அதிகாரங்களைப் பிரிக்கிறார். அறத்துப்பாலில் பதின்மூன்று
அதிகாரமும், பொருட்பாலில் இருபத்து ஆறு அதிகாரமும், காமத்துப் பாலில்
ஓர் அதிகாரமும் அமைக்கின்றார்.

பிற்கால உரைகள்

    நாலடியார் போன்ற நீதி நூல்களை, மாணவர் பயிலும் நோக்கத்துடன்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாட நூலாக வைத்த பின்னர், அவற்றிற்கு
உரைகள் பல தோன்றின. உரையும் விளக்கமும் நாடெங்கும் பரவின.