பக்கம் எண் :

337ஆய்வு

4

திருக்குறள் உரைகள்


1. திருக்குறள் உரையாசிரியர்கள்

     தமிழ்மொழியில் தோன்றிய நூல்களுள் திருக்குறளுக்குப் பலவகையான
சிறப்புகள் உண்டு. உரைகள் காலந்தோறும் தோன்றி வருவது அந்நூலின்
சிறப்புகளில் ஒன்று. பரிமேலழகர்க்கு முன், ஒன்பது உரைகள்
திருக்குறளுக்குத் தோன்றின. பத்தாவது உரையாகப் பரிமேலழகர் உரை
தோன்றிய பின்னரும் கூட, கணக்கற்ற உரைகள் தோன்றியுள்ளன.

     திருக்குறளுக்கு நேரே உரை எழுதியவர்களே அல்லாமல் இளங்கோ
அடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் போன்ற புலவர்
பெருமக்கள் தம் நூல்களில் ஆங்காங்கே திருக்குறளை எடுத்தாண்டு,
விளக்கமும் கூறியுள்ளனர். அப்பகுதிகளை எல்லாம் ஒன்றுசேர்த்துப்
பார்த்தால் அச்சான்றோர்கள் திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில்
உரைவிளக்கம் கூறி இருப்பது வெளிப்படும். பிற்காலத்தில் நீதி நூல்களை
இயற்றிய சான்றோர்களும், திருக்குறளுக்குச் செய்யுள் வடிவில் உரை
இயற்றியுள்ளனர்.

     திருக்குறளைப் பயின்றவர்கள் அதன் சுவையில் ஈடுபட்டுப் புகழ்ந்து
பாடினர். திருக்குறளில் உள்ள பால், இயல், அதிகாரம், பா ஆகியவற்றைக்
கணக்கிட்டு உரைத்தனர். அவ்வாறு புகழ்ந்து பாடிய பாடல்கள்
திருவள்ளுவமாலை என்ற பெயருடன் வழங்கி வருகிறது. திருக்குறளில்
பால்தோறும் உள்ள இயல்களை ஆராய்ந்து உரைப்பது உரையாசிரியரின்
பணியாதலின் (திருவள்ளுவ மாலையில்) இயல்ஆராய்ச்சியில் ஈடுபட்டுப்
பாடல்கள் இயற்றியவர்களும் உரையாசிரியர்களாக மதிக்கத் தகுந்தவர்களே.

     திருக்குறளுக்கு உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை
இயற்றியவர்கள் தம் உரைகளில் தேவையான இடங்களில் திருக்குறட்பாக்கள்
சிலவற்றிற்கு உரை எழுதியுள்ளனர்.