பக்கம் எண் :

உரையாசிரியர்கள்338

சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார்,
நச்சினார்க்கினயிர், மயிலைநாதர், சங்கர நமசிவாயர் ஆகியோர் தம்
உரைகளில் வாய்ப்பு நேர்ந்தபோது திருக்குறள் சிவற்றிற்கு உரை
கண்டுள்ளனர். அவ்வுரைகள் புதிய கருத்துகளுடன், இன்றுள்ள உரைகளோடு
மாறுபட்டு உள்ளன. திருக்குறள் உரைகளைப் பதிப்பித்து வெளியிடுவோர்
அத்தகைய உரை விளக்கங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும்.

     பல ஆண்டுகளுக்குமுன், திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரை,

    தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
    பரிதி பரிமே லழகர் - திருமலையர்
    மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு
    எல்லையுரை செய்தார் இவர்.

என்ற தனிப் பாடல் கூறுகின்றது. இப் பதின்மருள் இன்று பரிமேலழகர்,
மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐவர் இயற்றிய
உரைகள் கிடைத்து அச்சில் வெளி வந்துள்ளன. ஏனையோர் உரைகள்
கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்தில் (5.6) இரண்டு குறள்களுக்குத் தாமத்தர்
நச்சர் தருமர் ஆகிய மூவர் உரைகள் கிடைத்துள்ளன. மற்ற உரைகள்
மறைந்தது தமிழிலக்கிய உலகிற்குப் பெரிய இழப்பாகும்.

     கம்பர் காலத்தில், திருக்குறளுக்குச் சில உரைகள் வழங்கின என்று
கருத இடமுண்டு.

    அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு

என்ற குறளுக்குத் தம் காலத்தில் வழங்கிய வேறு உரைகளைப் பின்வரும்
பாடலில் கம்பர் குறிப்பிடுகின்றார்:

   என்பென்பது யாக்கைஎன்பது உயிர்என்பது இவைகளெல்லாம்
   பின்பென்ப அல்லவேனும் தம்முடை நிலையிற்பேரா

   முன்பென்ப உளஎன்னும் முழுவதும் தெரிந்தவாற்றால்
   அன்பென்பது ஒன்றின்தன்மை அமரரும் அறிந்ததன்றால்.

                                      (யுத்த-மருத்துமலை-4)

    பரிமேலழகர்க்குமுன் இருந்த தருமரைப்பற்றி அபிதானகோசம்,
“வள்ளுவருக்கு உரை செய்த பதின்மருள் முற்பட்டவராகிய தருமர் (தரும
சேனர்) உரையில் ஆருகத மதக் கொள்கைகளே பிரசங்கிக்கப்பட்டன” என்று
கூறுகின்றது.