தருமர் நாலடியாருக்கும் உரை இயற்றியுள்ளார். அவ்வுரை அச்சில் வந்துள்ளது. இவரைப்பற்றி வேறு செய்தி எதுவும் தெரியவில்லை. நச்சர் என்பவர் நச்சினார்க்கினியர் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் நச்சர், நச்சினார்க்கினியர் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. பெயரில் உள்ள சில எழுத்துக்களின் ஒற்றுமை அவ்வாறு நினைக்க இடம் தருகின்றது. நச்சினார்க்கினியரைப்பற்றிய சிறப்புப் பாயிரம் அவர் திருக்குறளுக்கு உரை இயற்றியதாய்க் குறிப்பிடவில்லை. திருமலையர் என்பவர் சமணராய் இருத்தல் கூடும். திருமலை என்பது, வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது; சமணர்க்குரிய இடமாய்த் திகழ்ந்து வருகின்றது. தாமத்தர், மல்லர் ஆகியோரைப்பற்றி எந்தச் செய்தியும் வெளிப்படவில்லை. ஏனைய உரையாசிரியர்களைப்பற்றி அடுத்து வரும் பகுதிகளில் விரிவாகக் காண்போம். பத்து உரைகளே அன்றி, இயற்றியவர் பெயர் தெரியாத இரண்டு உரைகளும் உள்ளன. அவற்றுள் ஒன்றினை ‘திருக்குறள் பழையவுரை’ என்ற பெயருடன் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. மற்றோர் உரை பரிதியாரின் உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. முதல் பதினோரு அதிகாரங்களுக்குமேல் இப் பழைய உரைக்கும் பரிதியார் உரைக்கும் வேறுபாடில்லை. கடவுள் வாழ்த்துப் பகுதியில் சைவ சமயக் கருத்திற்கு ஏற்பக் கடவுளின் தன்மை கூறப்பட்டுள்ளது. வழக்குச் சொற்களும் வடசொற்களும் மிகுதியாக உள்ளன. சைவ சமயச் சார்புடைய புராணங்கள் மேற்கோள் காட்டப்பெறுகின்றன. நடைச் சிறப்பு இல்லாவிட்டாலும் கருத்துச் சிறப்பிற்காகக் கற்று மகிழவேண்டிய இடங்கள் பல உள்ளன. திருக்குறளுக்குப் பல உரைகள் தோன்றியதற்கு உரிய காரணங்களை ஆராய்ந்த டாக்டர் வ.சு.ப.மாணிக்கம் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றார்: “இதுகாறும் வந்த உரைகளை ஆராய்ந்தால் அவை பல்கியதற்குப் பின்வரும் காரணங்கள் கூறலாம். 1. பாட வேற்றுமையால் சில உரை வேற்றுமைகள் காணப்படும். இவை ஆராய்ந்து ஏற்கத்தக்கன. |