பக்கம் எண் :

341ஆய்வு

தனியாய் வெளிவந்துள்ளன. ஏனைய உரைகளும் விரிவான ஆராய்ச்சி
முன்னுரைகளுடன் வெளிவருவது திறனாய்வுக்குப் பயன்தரும்.

     1935-இல் பரிதி உரை வெளிவந்துள்ளது. அதனை மீண்டும்
வெளியிடவேண்டும்.

2. திருக்குறள் அமைப்பும்

உரையாசிரியர்கள் நோக்கும்

    திருக்குறளுக்குப் பல உரைகள் தோன்றியுள்ளதால் அவற்றை ஒப்பிட்டுக்
காணும் வாய்ப்பு ஏற்படுகின்றது. உரைகளை ஒப்பிட்டு நோக்கும்போது
மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுகின்றன. நூலின்அமைப்பு,
உரையாசிரியர்களின் நோக்கு, பால்தோறும் அமைந்துள்ள இயல்கள்,
அதிகாரம்தோறும் உள்ள குறள் அமைப்பு, ஒரே குறளுக்குப் பலவேறு
கருத்துக்கள், ஒரே சொல்லுக்கு வேறுவேறு பொருள்கள் ஆகியவற்றைத்
தெளிவாக அறியமுடிகின்றது.

     பால்தோறும் அமைந்துள்ள இயல் பற்றிய ஆராய்ச்சி மிகவும்
சுவையானது. இயல் பிரிப்பில்தான் உரையாசிரியர்கள் திருக்குறளை நோக்கிய
நோக்கு வெளிப்படுகின்றது.

திருவள்ளுவமாலை

    திருக்குறள் இயல்அமைப்பை அறியத் திருவள்ளுவமாலை துணை
செய்கின்றது; உரையாசிரியர்களின் கருத்தை ஒப்பிட்டுக் காண உதவுகின்றது.
திருவள்ளுவ மாலையில் உள்ள,

    பாயிரம் நான்கு இல்லறம் இருபான் பன்மூன்றே
    தூய துறவறம் ஒன்று ஊழாக - ஆய
    அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
    திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து
                                   (திருவள்-25)

என்ற வெண்பா அறத்துப்பாலின் இயல்களைக் கணக்கிட்டு உரைக்கின்றது.

    அரசியல் ஐயைந்து; அமைச்சியல் ஈரைந்து
    உருவல் அரண்இரண்டு; ஒன்றுஒண்கூழ்;-இருவியல்
    திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்று   
    எண்பொருள் ஏழாம் இவை.
                                   (திருவள்-26)