பக்கம் எண் :

343ஆய்வு

கின்றார். அவர் கருத்துப்படி பொருட்பாலின் முதல் இருபத்தைந்து
அதிகாரங்கள் அரசனின் சிறப்பை உணர்த்துவதால் அரசியல் எனப்படும்;
அதற்கு அடுத்த முப்பத்திரண்டு அதிகாரங்கள் அரசனுக்கு அங்கமாகிய
அமைச்சு, நாடு, அரண், பொருள், நட்பு என்ற ஐந்தினையும் பற்றியவை.
அரசியலிலும் அங்கவியலிலும் அடங்காதவை ஒழிபியலில் கூறப்படுகின்றன.

     பரிமேலழகர் ‘குடி’யை அங்கமாகக் கொள்ளவில்லை. ‘படை குடி’
என்ற பொருட்பாலின் முதற்குறளின் விளக்கவுரையில், “ஈண்டுக் குடி
என்றது அதனையுடைய நாட்டினை; கூழ் என்றது அதற்கு ஏதுவாய
பொருளை” என்றும், “அமைச்சு நாடு அரண் பொருள் படை நட்பு என்பதே
முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழவைத்தார்” என்றும் தம்
கருத்தை அவர் வலியுறுத்துகின்றார்.

     மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகிய மூவரும் பொருட்பாலை
அரசியல் (1-25), அமைச்சியல் (26-35), பொருளியல் (36-40), நட்பியல்
(41-45), துன்பவியல் (46-57), குடியியல் (58-70) என ஆறாகப் பிரித்து உரை
கண்டுள்ளனர். பரிமேலழகர் ஒழிபியல் (58-70) என்று கொண்டதை இம்
மூவரும் குடியியல் என்று கொண்டதை இம் மூவரும் குடியியல் என்று
கொண்டுள்ளனர்.

     காலிங்கர் அமைத்த இயல்பிரிவே பொருட்பாலை நன்கு விளக்கும்
கருவியாய் உள்ளது. அவர் பொருட்பாலை அரசியல் (1-25), அமைச்சியல்
(26-35), அரணியல் (36-37), கூழியல் (38), படையியல் (39, 40), நட்பியல்
(41-57), குடியியல் (58-70) என ஏழாகப் பிரித்து உரை கண்டுள்ளார்.
திருவள்ளுவ மாலையில் போக்கியார் செய்யுள் (26) கூறும் இயல் பிரிவுகள்
இவ்வாறே அமைந்துள்ளன. மேலும்,

    படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு              (381)

என்பது பொருட்பாலின் முதற் குறள். இதனைப் பொருட்பாலின் திறவுகோல்
என்னலாம். இதில் கூறியுள்ள ஏழுவகைப் பொருளையே பொருட்பால்
விரித்துச் செல்கின்றது. இக் குறளில் அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு,
குடி என்று கூறுவதே முறையாயினும் செய்யுள் நோக்கிப்
பிறழவைக்கப்பட்டுள்ளன. காலிங்கர் பொருட்பாலின் முதற் குறள் உரையில்,
“இங்குச் சொன்ன இறை முதலாகிய எழுவகைப் பொருளுமே இப்பொருட்பால்
நடைப்பொருள் என அறிக” என்று தம் கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.