காமத்துப்பால் பரிமேலழகர் காமத்துப்பாலைக் களவு (1-7), கற்பு (8-25) என இரு பிரிவாக்கியிள்ளார். அதிகாரம்தோறும் அகப்பொருளுக்குரிய விளக்கம் கூறுகின்றார். ஒவ்வொரு குறட்பாவும் இன்னாருடைய கூற்று என்று குறிப்பிடுகின்றார். குறட்பாக்களுக்கு உரை எழுதும் போது தமிழ் அகப்பொருள் இலக்கணத்தை நன்கு பயன்படுத்தி, சிறப்பான முறையில் ஆராய்ந்து அரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். காமத்துப்பாலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் திருவள்ளுவர் ‘தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும், பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மை பற்றி வகுத்து’ அமைத்துள்ளதாகக் கூறுகின்றார். பரிமேலழகரைப் போலவே காமத்துப்பாலை, புணர்தல் பிரிதல் பொருள்;களவு கற்பென்று உணரும் இருகூறாம் உரைக்கில்-புணரும் களவுஏழ் அறுமூன்று கற்புஇவை ஐயைந்தாம் அளவுறு காமத்துப் பால். என்ற வெண்பா, இயல் பிரித்துக் காட்டுகின்றது. இப்பாடல் பரிமேலழகர் உரைக்குப்பின் அவர் கருத்தை நினைவில் கொள்ள எழுந்ததாக இருக்க வேண்டும். பரிப் பெருமாள், காமத்துப் பாலை அருமையிற் கூடல் (1-3), பிரிந்து கூடல் (4-21), ஊடிக் கூடல் (22-25) என மூன்றாகப் பகுத்துள்ளார். இவ்வாறு பிரிப்பது தமிழ் மரபு அன்று என்பதை உணர்ந்து அவர், “அதற்கு இலக்கணம் “யாங்ஙனம் பெறுதும்?” என்ற வினைவைத் தாமே எழுப்பிக் கொண்டு, “இதற்கு இலக்கணம், வாத்ஸ்யாயனம் என்றும் காமதந்திரத்துச் சுரத விகற்பம் என்னும் அதிகரணத்துள் கண்டுகொள்க” என்று விடையும் கூறுகின்றார். திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியம்: அகப் பாடல்களின் சாறு; பழந்தமிழ் மரபை ஒட்டி எழுந்த தீஞ்சுவைக் காதற் களஞ்சியம்; கற்பனைவளமும் இலக்கியச்சுவையும் சேர்ந்து அமைக்கப்பட்ட கலைக் கோயில்; அன்பும் அறனும் ஒன்றிய இன்பநெறி. வாத்ஸ்யாயனம் அறிவு நுட்பத்துடன் உலகியலை ஆராய்ந்து எழுதிய நூல். அதில் மாசற்ற உள்ளத்தில் ஊறிச் சுரக்கும் அன்புக்கும் முறை திறம்பாத அறநெறிக்கும் இடமில்லை. எனவே, திருவள்ளுவரின் காமத்துப் பாலுக்கு வாத்ஸ்யாயனத்தை இலக்கணமாகக் கொள்வது பொருந்தாது. |