மணக்குடவர் காமத்துப் பாலில் உள்ள இருபத்தைந்து அதிகாரங்களையும் குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்ற வரிசைப்படி, ஒவ்வொரு திணைக்கும் ஐந்து அதிகாரங்கள் அமைத்துள்ளதாக, ‘திருவள்ளுவர்’ என்ற நூலில் (பக்கம் 29) தமிழ்ப் பெரியார் செல்வக் கேசவராய முதலியார் கூறுகின்றார். அப்பெரியார் மணக்குடவர் உரையாகப் பின்வரும் பகுதியைத் தந்துள்ளார்: “காமத்துப்பால் கூறுவார்: குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்னும் ஐந்திணையும் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றனுள், பெரும்பான்மையும் உரிப்பொருள் பற்றிப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரே நிலம் ஐந்து அதிகாரமாக இருபத்து ஐந்து அதிகாரத்தால் கூறி...” இன்று அச்சாகியுள்ள மணக்குடவர் உரையில் இப்பகுதி காணப்படவில்லை. காமத்துப் பாலுக்குப் பரிப்பெருமாள் மேற்கொண்ட இயல் பிரிவுகளே மணக்குடவர் உரையிலும் உள்ளது. இதனை மேலும் ஆராய்தல் வேண்டும். சோழவந்தான் அரசன் சண்முகனார் காமத்துப் பாலை மேலே கூறியவாறு ஐந்தாகப் பிரிப்பதுண்டு என்று குறிப்பிடுகின்றார்.1 காலிங்கர் காமத்துப்பாலை மூன்றாக (திருவள்ளுவ மாலை வெண்பா (27) கூறுவது போல) வகுத்துள்ளார். அவர் கருத்தின் படி ஆண்பாற் கூற்று (1-7) பெண்பாற் கூற்று (8-19), இருபாற் கூற்று (20-25) என மூன்று இயல்களாக அமையும். காலிங்கர் எட்டாவது அதிகாரத்தின் தொடக்கத்தில், “தலைமகன் கூற்று முடிந்தது; இனித் தலைமகள் கூற்றுக் கிளவி வருமாறு” என்று எழுதி உரையைத் தொடங்குகின்றார். ‘குறிப்பறிவுறுத்தல்’ என்ற அதிகாரத்தின் (20) தொடக்கத்தில் “இருபாற் கிளவி வருமாறு” என்று கூறுகின்றார். ஏழாம் அதிகாரமாகிய அலர் அறிவுறுத்தல் என்பதில் உள்ள நான்கு குறட்பாக்களைப் (6,7,9,10) பெண்பாற் கூற்றுக்களாகக் காலிங்கர் ஒழிந்த ஏனைய உரையாசிரியர்கள் கொண்டுள்ளனர். ஆனால் காலிங்கர் அந்நான்கு குறட்பாக் 1. செந்தமிழ் - 6, பக். 208 |