வகையாய் அமைய வேண்டுமே என்ற நோக்கம், சில பகுதிகள் விரிவாகவும் மற்றவை போதிய அளவு விளக்கமின்றியும் அமையுமோ என்ற ஐயம், குறித்த காலத்திற்குள் எழுதி முடிக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சி ஆகியவற்றால் மூன்றாம் பதிப்பை மிகுதியாய் விரிவு செய்ய முடியவில்லை. திருமந்திரம் திருவாசகம் பெரியபுராணம் கம்பராமாயணம் பாரதம் தலபுராணங்கள் நிகண்டுகள் முதலிய நூல்களின் உரைகளைப் பற்றி விரிவாக எழுதுவதற்காகத் திரட்டிய கருத்துக்களைக் கட்டுரை வடிவில் எழுதிச் சேர்க்க முடியவில்லை. 19, 20 ஆகிய ஒரு நூற்றாண்டுகளில் தோன்றிய பல உரைகளைப் பற்றிய செய்திகள் நிறைய இருப்பதால், அவை தனி ஆய்வுக்கு உரியவையாகும். 18-ஆம் நூற்றாண்டிலிருந்த இன்று வரை உரைகளை வளர்த்த தமிழ்க் கழகங்கள், இதழ்கள் (வார, மாதப் பத்திரிகைகள்) செய்த உரைப்பணி, மடங்கள் உரைகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பல வகையான நற்பணிகள், பல்கலைக்கழக ஆய்வுகள் முதலியவை பற்றி வரிவாக எழுதலாம். ஏட்டுச் சுவடிகளில் இருந்த பழமையான சில உரைகள், அச்சிடப் பெற்று வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய ஆய்வு, உரையாசிரியர்கள் நூலில் இடம் பெற வேண்டும். பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர் ஆகியவர்களின் உரைத்திறன்களைப் பற்றி விரிவாக ஆய்ந்து தனித்தனியே பெரிய நூல்கள் எழுதலாம். இலக்கண உரைகள் இலக்கிய உரைகள் வைணவ உரைகள் திருக்குறள் உரைகள் நன்னூல் உரைகள் தொல்காப்பிய உரைகள் உரையாசிரியர்களின் திறனாய்வு முறைகள் உரைகளால் உருவான இலக்கணக் கோட்பாடுகள் உரையாசிரியர்களின் அகராதிக் கலைத்திறன் உரையாசிரியர்களின் உரை நடைத் திறன் உரையாசிரியர்கள் காட்டும் தமிழர் வாழ்வும் பண்பாடும் முதலிய தலைப்புகளில் ஆய்வு நூல்கள் இயற்றலாம். |