மகளிர் மனம்போல வேறுபடும் (822) “இருமனப் பெண்டிர் போல்” என்பது இவர் தரும் சிறப்புரை. பிற உரையாசிரியர்கள் இவ்வாறு கூறவில்லை. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் (683)-கல்வியுள்ளார் தான் கற்ற கல்வி வளங்குதல் ‘வெண்பாமாலையை’ வெல்லுதற்கு ஒக்கும். எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் (896)-நெருப்புப் பற்றின மரம் வேர் உண்டாய்ப் பதினைந்து நாளையில் கிளைக்கும். அற்றது போற்றி உணின் (942)-‘‘‘செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டு கூறும், தண்ணீர் ஒரு கூறும், வாயு சஞ்சரிக்க ஒரு கூறும், வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியை விட்டு அசனம் பண்ணக்கடவன்”. துய்க்க துவரப் பசித்து (944) “நித்தியம் ஒரு பொழுது அசனம் பண்ணி வருவானாகில் அவனுக்கு வியாதியில்லை”. உயிர் (1012)- “தேவர் கதி, மக்கள்கதி, விலங்கின் கதி, பட்சிகதி இவை எல்லாம் நவ தாதுவினால் எடுத்த சரீரம்”. அரியவற்றுள் (443)-”அரிதான காரியம் ஒருமலையை எடுத்து ஒருமலைமேலே வைத்தல்; ஒரு கடுகிலே எழுகடலை அடக்கல்.” வன்மை (1063)-‘மலையை எடுத்து மயிரிற் கட்டலும் கடுகில் எழுகடலை அடக்கலும் ஆகிய அவை அருமையல்ல” புதுமையான விளக்கம் பரிதியார் சில குறளுக்குத் தரும் விளக்கம் புதுமையாய் உள்ளது. இவர் கூறும் விளக்கம் ஏனைய உரைகளின் கருத்துக்கு மாறானவை. ‘நத்தம்போல் கேடும்’ (235) என்பதற்கு, “சங்கு ஆயிரம் சூழ்ந்த வலம்புரி போலே கிளையானது தன்னைச் சூழ வாழ்வது” என்று பொருள் எழுதுகின்றார். எண் என்ப(392) என்ற குறளின் உரையில், “ எண்ணாகிய சோதிடமும்” என்று உரைக்கின்றார். கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. (402) இக்குறளுக்குப் பரிதியார், “கல்லாதான் சொல்லைக் காமுறுதல் தனபாரம் இல்லாத பெண்ணைக் காமுறுதற்கு ஒக்கும்” என்று பொருள் கொள்ளுகின்றார். |