பக்கம் எண் :

உரையாசிரியர்கள்360

    தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
    மேவன செய்தொழுக லான்             (1073)

    “தேவர்க்கு நிகர் கயவர். அது எப்படி எனில், தெய்வமும் பத்தி
பண்ணுவார்க்கு நன்மை தரும்; அல்லாதார்க்குத் தீமை தரும். அதுபோல,
கயவரும் தமக்கு இதம் செய்வார்களுக்கு இதமும் அகிதம் செய்வார்களுக்கு
அகிதமும் செய்வர்”

    கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று                (1313)

    “செண்பகப்பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூச் சூடினும் குறிஞ்சி நிலத்து
நாயகியை வேண்டிச் சூடினீர் என்று ஊடினாள்”

மக்கள் வாழ்வும் நாகரிகமும்

    பரிதியாரின் உரையைக்கொண்டு அக்கால மக்களின் வாழ்வும்
நாகரிகமும் அறியலாம்.

     “குறிஎதிர்ப்பை நீரதுடைத்து” (221) என்பதற்கு ‘வட்டிக்குக்
கொடுப்பதை ஒக்கும்’ என்று கூறுவதால், கடன் கொடுத்து வட்டி வாங்கும்
வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்று அறியலாம்.

     விலைப் பொருட்டால் ஊன்தருவார்இல் (256) என்பதற்கு, “அகரத்திலே
(அக்கிராகாரம்) மாங்கிசம் (புலால்) விற்பாரில்லை” என்று உரைக்கின்றார்.

     நீராடி (278) என்பதற்கு, “மார்கழித் தீர்த்தம் என்றும் மகா தீர்த்தம்
என்றும் ஆடி” என்று கூறுகின்றார்.

     “பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” (282) என்பதற்கு
“ஒரு திருப்பணி போல காட்டி வாக்குதல்’ என்று இவர் கூறுவதால்
அக்காலத் துறவிகள் திருப்பணிக்குப் பணம் திரட்டினர் என அறியலாம்.

     தன்னுயிர் நீப்பினும் (327) என்ற குறளுக்கு, தன்னுயிர் துறக்கும்
காலமாகினும் இது பிழைக்கும் என்று, ஆடு கோழி பன்றியினைப் பிராத்தனை
செய்வான் அல்லன்” என்று விளக்கம் எழுதுவதால் அக்கால மக்கள் ஆடு
முதலியவற்றைப் பலி கொடுப்பது வழக்கம் என்று அறியலாம்.

     கூத்தாட்டு அவைக்குழாத்து (332) என்ற குறள் உரையில், “சந்தையிற்
கூட்டம் நாலு பேரும் ஆறு பேரும் வந்து சந்தையில் காரியங்கண்டு மீண்டும்
போவார்கள்’ என்று உரைப்பதால், இவர் காலத்தில் ஊர்தோறும் சந்தைகள்
கூடின என்று தெரிகின்றது.