பக்கம் எண் :

361ஆய்வு

4. காலிங்கர்

    திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைக்கு முன் தோன்றிய பழைய
உரைகளில் காலிங்கர் உரை பெரிதும் போற்றப்பட்டிருக்கலாம். செறிவு
வாய்ந்த நடையும் இலக்கண வரம்பறிந்து தூய தமிழ்ச் சொற்களை ஆளும்
திறனும் காலிங்கரிடம் உண்டு. கற்போர் உள்ளத்திற்குக் கிளர்ச்சியூட்டித் தம்
கருத்தைத் திறம்படக் கூறும் வல்லமை இவரிடம் உண்டு.

     காலிங்கர் என்ற பெயர் காளிங்கர் என்றும் வழங்கும். காலிங்கராயர்
என்ற பெயர் தமிழ்ப்புலவர்களுக்கு வழங்கியதற்குக் கல்வெட்டுக்கள்
சான்றுகளாக உள்ளன. 1
 

     திருவள்ளுவ மாலை கூறும் இயல் பிரிப்பை அப்படியே இவர்
பின்பற்றுவதாலும், மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோர் அம் முறையை
மாற்றி வேறுவகையில் இயல் பிரிப்பதாலும் அவ்விருவர்க்கும் காலிங்கர்
முற்பட்டவராகலாம்.

சமயம்

    இவர் சமண சமயத்தவர். இவ்வாறு கருத இவரது உரை உறுதுணை
புரிகின்றது.

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது            (377)

என்ற குறளில், வகுத்தான் என்பதற்கு வகுத்தார் என்று பாடங்கொண்டு,
பின்வருமாறு உரை எழுதுகின்றார்.

     “அதனால் முன்னஞ்செய்தார் செய்த வினைவகையால் துய்த்தல்
அல்லது மற்றுக் கோடிபொருள் ஈட்டினார்க்கும் அது கொண்டு துய்த்தல்
அரிது; எனவே, அங்ஙனம் ஈட்டுதற்கு உரியர் தானம் முதலிய நல்வினை
முன்செய்து மற்றது கொண்டு தான் நுகர்தற்கு வேண்டும் நல்வினை முன்னஞ்
செய்யாரேல் ஈட்டினரே ஆயினும், குறைவறத் துய்த்தல் அரிது என்றவாறு”.

     இங்கே சைன சமயக் கருத்து இடம் பெற்றுள்ளது. ‘பழவினை தன்னைச்
செய்தானைத் தானே சென்றடையும்’ என்பது அச்சமயக் கொள்கையாகும்.

    பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்.                    (580)

என்ற குறள் உரையில் ‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்பதற்கு,
“பெரியோரால் விரும்பத்தக்க உம்பர் உலகினுள்


 

1. சாஸனத் தமிழ்க் கவி சரிதம் (1937) பக்கம் - 161.