பக்கம் எண் :

உரையாசிரியர்கள்362

சிறப்புடைய உத்தரகுருவினைத் தாம் எய்தி இனிது வாழ்ந்திருக்க
வேண்டுபவர்” என்று எழுதுகின்றார்.

     ‘உத்தரகுரு-போகம் துய்க்கும் பூமி’ என்பது சைன நூற் கொள்கையாகும்.

உரையின் சிறப்பியல்புகள்

    காலிங்கர் ஒரு பாலின் தொடக்கத்தில் எழுதும் முகவுரையின் இறுதியில்,
அடுத்துவரும் பாலுக்குத் தோற்றுவாயும் எழுதுகின்றார்; இயல் ஆராய்ச்சியில்
ஈடுபடுகின்றார்; ஒவ்வோர் அதிகாரத்தின் இறுதிக் குறளிலும் அடுத்த
அதிகாரத்தைத் தொடர்பு படுத்திக் காட்டுகின்றார். ஆனால், அதிகாரத்தின்
தலைப்புப் பொருளை விளக்குவதில்லை.

     திட்பமும் செறிவும் சுருக்கமும் வாய்ந்த நடையை இவரது உரையில்
காணலாம். தனித்தமிழ் நடையில், சிறந்த தமிழ்ச் சொற்களை ஆளுகின்றார்.
உரை முழுவதும் இவரது தனித்தமிழ் ஆர்வம் மணம் வீசுகின்றது. பழைய
நூல்கள் பலவற்றிலிருந்து மேற்கோள் தருவதால், இவர் புலமை மிக்கவர்
என்பது உறுதி. திருக்குறளுக்கு உரை எழுதும் போது, முன்னும் பின்னும்
நோக்கி, தொடர்புகாட்டுகின்றார். இல்லறவியலில் கூறிய ஈகைக்கும்,
பொருட்பாலில் ‘அஞ்சாமை ஈகை’ (382) என்ற குறளில், மன்னனுக்கு உரிய
இயல்பாகிய ஈகைக்கும் வேறுபாடு காட்டுவது இங்கே நினைக்கத்தக்கதாகும்.

     குறளுக்கு உரை எழுதியபின், குறளில் இடம் பெற்றுள்ள அரிய
சொல்லுக்குப் பொருள் எழுதுகின்றார். மிகுதியாக விளக்கம் இல்லாமல்
இரண்டொரு சொல்லுக்குமட்டும் அகராதி போலப் பொருள் உரைக்கின்றார்.
அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்:

     அன்மை என்பது அல்லாமை என்றாயிற்று (172).

     தப்பு என்றது பொய் என அறிக. (183).

     சீர்மை என்பது ஒழுக்கம். சிறப்பு என்பது ஆக்கம். நீர்மை என்பது
தண்ணளி (195).

     அவாவல்-சூழ்தல் (215).

     எவ்வம் என்பது துயரம் (223).

     மன்ன என்றது நிலைபெறுதலை (245).

     தெருளாதான் என்பது அறிவில்லாதவன். தேரின் என்பது ஆராயின்
(249).

     குடம்பை என்பது புள்ளியற்றும் கூடு (338).