பக்கம் எண் :

363ஆய்வு

     தெய்வத்தான் என்றது விதியினால் என்றது (619).

     ஏந்துதல்-மிகுதல் (899).

     உறில் என்பது இன்புறுதல் என்றது (1270).

     தஞ்சம் என்பது எளிமைப் பொருட்டு. இடுக்கண் உற்ற விடத்து
எய்துதல் என்பது (1300).

     காலிங்கர், தம் உரையில் ஆங்காங்கே சுவையான மேற்கோள்களை
நாலடியார், புறநானூறு, சீவக சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய
நூல்களிலிருந்து தருகின்றார்.

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு                       (920)

என்ற குறளின் உரைக் கீழ்,

      இம்மையே தவஞ்செ யார்கை
         இருநிதி அகற்றல் வேண்டி
    நம்மையும் கள்ளும் சூதும்
         நான்முகன் படைத்து விட்டான்

    என்ற சுவையான பாடலை மேற்கோள் தருகின்றார்.*

     காலிங்கர் தம் உரையை வினாவிடை முறையில் அமைத்துள்ளார்.
ஆசிரியர், மாணவர்க்குப் பாடம் சொல்லும் போது, ஏன் எனில், ஆயின்
என்று வினா எழுப்பி விடை கூறி விளக்குவது போல இவர், உரை எழுதிச்
செல்லுகின்றார்.

வினாவும் விடையும்

    காலிங்கர், உரை எழுதிச் செல்லும் போக்கில் பிற
உரையாசிரியர்களிடமிருந்து விலகித் தமக்கென ஒருவகைத் தனித் தன்மையை
நிலைநாட்டி விடுகின்றார். இவரது உரையின் பெரும்பகுதி, மாணவன் ஒருவன்
வினா எழுப்ப அதற்கு ஆசிரியர் விடை கூறுவதுபோலவே அமைந்துள்ளது.

    பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
    செய்தாங்கு அமையாக் கடை                       (803)

என்ற குறளுக்கு, “அவரோடும் நெடுங்காலம் பழகிய நட்பு எல்லாம் என்
செய்யும்; யாதும் இல்லை; எவ்விடத்து எனின், கீ்ழ்ச் சொன்னபடியே அவர்
தமக்கு வேண்டும் கெழுதகைமை செய்து அமையா இடத்து” என்று உரை
எழுதுகின்றார். இங்கே வினா விடை முறை அமைந்துள்ளது. இம் முறை பல
குறட்பாக்களின் உரையில் அமைந்துள்ளது.


 * இப்பாடல் சிறிது வேறுபாட்டுடன் விவேக சிந்தாமணியில் உள்ளது.