பக்கம் எண் :

உரையாசிரியர்கள்364

     வினாவிடை முறைக்கு வேறோர் சொல், ஆக்கந் தருகின்றது. மற்று
என்ற சொல் குறள்உரை தோறும் இடம் பெற்று ஒருவகை இணைப்பை
முன்னும் பின்னும் உண்டாக்கின்றது.

     இவ்வாறு, பாடம் கூறும் முறையில் எழுதிச் செல்வது இவரது உரையின்
தனித்தன்மையாகும்.

சொல்லோவியம்

    காலிங்கர் உரையில், கற்பவர் கண்முன் தோன்றும் வகையில்
எழுதப்பட்ட சொல்லோவியங்கள் சில உள்ளன.

     “முலை இரண்டும் இல்லாதாள் பெண்காமுற்று அற்று” (402) என்ற
உவமையைப் பின்வருமாறு விளக்குகின்றார்: “முலை இரண்டும் முன்னமே
தனக்கு இல்லாதாளாகிய பேடியானவள் மற்று அம்முலை வனப்புறூஉம்
திருவுடையாட்டியது பெண்மை கொண்டு இன்புறுதற்குத் தானும் காதலித்த
அத்தன்மைத்து”.

     வேலொடு நின்றான் இடு என்றது போலும் (552) என்ற உவமையைப்
பின்வருமாறு விளக்குகின்றார்: “தான் கைப் பற்றிய மூவிலை வேலோடு
நின்றான் ஒரு மூர்க்கன் அதனை ஓங்கி, ‘வேலே! கடிதின் கொணர்ந்திடு
பலி!’ என்றதனை ஒக்கும்”.

கவிதை மின்னல்

    இவரது உரையில் சில இடங்களில் கவிதை மின்னல் பளிச்சிட்டு ஒளி
வீசுவதைக் காணலாம். அவ்விடங்களில் இலக்கியச்சுவை முதிர்ந்து, இன்பம்
அளிக்கின்றது.

     அறத்துப்பாலின் இறுதியில், “வள்ளுவக் கடவுள் வகுத்தமைத்துரைத்த
எள்ளறு சிறப்பின் அறத்துப்பால் முற்றும்” என்று எழுதுகின்றார். இங்கே
எதுகைமோனை நயம்பட அமைந்து இன்பமூட்டுகிறது.

     ‘மண்ணோடியைந்த’ என்ற குறளின் (576) உரை சிறந்த கவிதையாய் -
ஓசைநயம் வாய்ந்த அகவல் பாடலாய் அமைந்துள்ளது.

     “வண்ணம் எழுதா வகைத்து உருவாகிய மண்மேல் எழுதிய கற்பகத்தரு
முதலிய போல்பவர் யார்எனில், செய்யவாயும் செவ்வரிக் கண்ணும் கரிய
குழலும் வெளியநகையும் பிறவும் ஆகிய வகையமை உறுப்பின் வனப்பு
வேற்றுமை தகைபெற உடைய தன்மையரேனும் கண்ணுறுப்பாகிய
கண்ணோட்டம் இல்லாத கடுவினையாளர்” என்ற உரைப்பகுதியை
எதுகைமோனை இயைபு நோக்கிச் சீர்பிரித்து அமைத்தால் ஆசிரியப்பா
ஒன்று அமையும்: