பக்கம் எண் :

365ஆய்வு

பிற உரைகளைக் குறிப்பிடல்

    காலிங்கர் தமக்குமுன் வழங்கி வந்த உரைகளையும், பிற பாடங்களையும்
குறிப்பிடுகின்றார். இவர் குறிப்பிடும் பிற உரைகளும் வேறு பாடங்களும்
இன்று கிடைத்துள்ள உரைகளில் காணப்படவில்லை. காலிங்கருக்கு
முன்னர்ப்பல உரைகள் இருந்தன என்று அறியலாம்.

     ‘குடிமடிந்து’ என்ற குறள் உரையில் (604) ‘குடிமடிந்து என்பதனைச்
சுற்றத்தார் மாய்ந்து என்பாரும் உளர்’ என்று கூறுகின்றார்.

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்                   (980)

என்ற குறளை இவர்,

    அற்றம் மறைக்கும் சிறுமை பெருமைதான்
    குற்றமாக் கொண்டு விடும்

என்று வேறு பாடங்களுடன் கொண்டுள்ளார். மேலும் சிறப்புரையில்,

  “ ‘அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாய்ச் சூழ்ந்து விடும்’

என்பது பாடமாயின்” என்று பிற பாடத்தைக் கூறி அதற்கு ஏற்றவாறு
உரையும் கூறுகின்றார். “இன்னும் பிறவாறு பாடம் ஓதுவாரும் உளர்
என்னின், அதற்கு ஏற்குமாறு அறிந்து உரைக்க” என்றும் உரைக்கின்றார்.

     காலிங்கர் உரையிலிருந்து இக் குறள் பலவேறு பாடங்களைக்
கொண்டிருந்தது என்பது விளங்கும்.

     ‘செல்லான் கிழவன்’ என்ற குறள்உரையில் (1039) “நிலம் புலந்து
இல்லாளை ஊடிவிடும்’ என்பாரும் உளர்” என்று உரைக்கின்றார்.

     கோட்டுப் பூச் சூடினும் என்ற குறளின் உரையில் (1313) “கோட்டுப்பூ -
தாளிப்பூ என்பாரும் உளர்” என்கின்றார்.

உரை ஒற்றுமை

    காலிங்கர் உரை, சில குறட்பாக்களுக்குப் பரிதி உரையாகவே உள்ளது.
காமத்துப்பாலில் உள்ள இரண்டு குறள்களுக்குப் பரிப்பொருள் உரையோடு
ஒத்துள்ளது. இத்தகைய ஒற்றுமை எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.