அறத்துப்பாலில் அழுக்காறாமை என்ற அதிகாரத்தில், ‘ஒழுக்காறாக் கொள்க’ (161) ‘கொடுப்பது அழுக்கறுப்பான்’ (163), ‘அவ்வித்து அழுக்காறு’ (167) ஆகிய மூன்று குறள்களுக்கும் பரிதி, காலிங்கர் இருவரும் ஒரே வகையாய் உரை எழுதுகின்றனர். பயனில சொல்லாமை என்ற அதிகாரத்தில் ‘பல்லார் முனிய’ (191), ‘நயனிலன் என்பது’ (193), ‘நயன் சாரா’ (194) ஆகிய மூன்று குறள்களுக்குக் காலிங்கர் உரை, பரிதி உரையுடன் ஒத்துள்ளது. காமத்துப்பாலில் ‘கோட்டுப்பூச் சூடினும்’ (1313), ‘புல்லிவிடா’ (1324) என்ற இரண்டு குறள்களுக்குக் காலிங்கர் உரையும் பரிப் பெருமாள் உரையும் ஒத்துள்ளன. பரிமேலழகர் காலிங்கரைக் குறிப்பிடும் இடங்கள் பரிமேலழகர், காலிங்கர் கூறிய உரையையும் கொண்ட பாடத்தையும் சில இடங்களில் குறிப்பிடுகின்றார்: மிகச் சில இடங்களில் மறுக்கின்றார். ‘அறம் பொருள் இன்பம் உயிரச்சம்’ என்ற குறளின் (501) உரையில் பரிமேலழகர், ‘உயிர் எச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்’ என்று குறிப்பிடுவது காலிங்கரையேயாகும். ‘ஊனைக் குறித்த உயிர் எல்லாம்’ என்ற குறளின் (1013) உரையில் பரிமேலழகர், ‘ஊணைக் குறித்த என்று பாடம் ஓதுவாரும் உளர்’ என்று காலிங்கர் கொண்ட பாடத்தைச் சுட்டுகின்றார். பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண் (1178) என்ற குறளில் ‘மற்றவர் என்பதற்குக் காலிங்கர் ‘கொண்கனை’ என்று வேறு பாடம் கொண்டுள்ளார். பரிமேலழகர் இப்பாடத்தை, இனி, ‘கொண்கனை என்று பாடமாயின்’ என்று கூறி இப் பாடத்திற்கு ஏற்ற பொருளும் கூறுகின்றார். அதிகாரங்களின் பெயர் - வேறுபாடு காமத்துப்பாலில் உள்ள நான்கு அதிகாரங்களின் பெயர்களில், சில வேறுபாடுகள் காலிங்கர் உரையில் காணப்படுகின்றன. பரிமேலழகர் காலிங்கர் 110. குறிப்பறிதல் குறிப்புணர்தல் 111. புணர்ச்சி மகிழ்தல் புணர்ச்சியின் மகிழ்தல் 118. கண்விதுப்பழிதல் கண்விதுப்பழித்தல் 127. அவர்வயின் விதும்பல் அவர் வயின் விரும்பல் |