பக்கம் எண் :

37

பணியில் உள்ளவர்களும் தமிழாய்வில் ஈடுபட்டு வருகின்ற சூழல் மகிழ்ச்சி
தருகின்றது.
ஆய்வின் நடுவில் எதற்கெடுத்தாலும் ஆங்கில மேற்கோள்களைத்
தேடி எடுத்து, நுழைக்கின்ற பழக்கம் குறைந்து வருகின்றது.

     தமிழில் இல்லாததைப் பெறுதல், இழந்ததை ஈடு செய்தல், உள்ளதைப்
போற்றுதல் ஆகிய மூன்று வகையான பணிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு
வருகின்றனர்.

     ‘தமிழருக்கென்று இலக்கியமும், இலக்கணமும் இருப்பது போலவே,
திறனாய்வுக் கோட்பாடுகளும் உண்டு’ என்ற தெளிவு, வருங்காலத்தில்
உருவாகும்.

     அத்தகைய தெளிவு ஏற்பட, ‘உரையாசிரியர்கள்’ நூல் உதவி செய்யும்
என்பது, பதிப்புச் செம்மல் டாக்டர் ச. மெய்யப்பனாரின் நம்பிக்கையாகும்.
அந்த நம்பிக்கையே அவர்களை உரையாசிரியர்கள் நூலை வெளியிடத்
தூண்டியது. அந்த நூலை உருவாக்கும் வாய்ப்பை அவர்கள் எனக்கு
நல்கினார்கள். அவர்களுடைய ஊக்கமும் ஒத்துழைப்பும் உறுதுணையும்
இல்லை என்றால் ‘உரையாசிரியர்கள்’ நூல் தோன்றி இராது. விரிவும்
செப்பமும் பெற்று மறுமதிப்புகள் வெளிவந்திரா. நூலாக்கத்திற்காக அவர்கள்
எனக்குச் செய்த நன்மைகள் பல; காலமும் இடமும் தேவையும் அறிந்து
செய்த உதவிகள் பல. என் இயல்பு அறிந்து எனக்களித்த ஆக்கங்கள் பல.

     ‘உரையாசிரியர்கள்’ நூலின் மூன்றாம் பதிப்பு வெளிவரும்போது, நான்
அவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்; அவர்களுக்கு நன்றி பல
கூறுகின்றேன்.

     இந்த நூல் நன்கு அமைந்து விரைவில் வெளிவர வேண்டும் என்று
நெடிது சிந்தித்தும், இடைவிடாது நெடிது சிந்தித்தும், இடைவிடாது
நினைவூட்டியும், மனமுவந்த வாழ்த்தியும், வாயாரப் புகழ்ந்தும் என்னைப்
போற்றி வருபவர், பதிப்புச் செம்மலின் தந்தையார் வடலூர் உள்ளொளி
பழ. சண்முகனார். அவர்களுடைய அருளும் ஆதரவும் ஆசியும் எனக்கு
ஆக்கமும் ஊக்கமும் தருகின்றன.

     மணிவாசகர் பதிப்பகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை,
பதிப்பகத்தின் மூல சக்தியாய் இயங்கி வருகின்ற என் அன்புக்குரிய தோழர்
குருமூர்த்தி, இந்த நூலின் ஆக்கத்திற்குச் செய்த உதவிகள் பல உண்டு.