‘நாநலம் என்னும் நலன் உடைமை’ (641) என்பதற்கு, ‘சொல்வலை வேட்டுவன் என்றாரும் உளர்’ (புறம் 252) என்று புறநானூற்றைக் குறிப்பிடுகின்றார். மூன்று வகையான தூதர் இயல்பை, “தலையான தூதன் தானே காரியம் அறிந்து சொல்லும்; இடையான தூதன் சொன்ன மாற்றத்தைச் சொல்லும்; கடையான தூதன் ஓலை காட்டும்” என்று இவர் உரைக்கின்றார் (687). இக்கருத்து, தானறிந்து கூறும் தலைமற் றிடையது கோன்அறிந்தது ஈதுஎன்று கூறுமால் - தானறியாது ஓலையே காட்டும் கடைஎன்று ஒருமூன்றும் மேலையார் தூதுரைத்த வாறு என்ற பாரத வெண்பாவின் கருத்தைத் தழுவியதாகும். வடமொழிப் புலமை வடமொழியில் உள்ள காமநூலையும் அரசியல் நூலையும் ஆழ்ந்து பயின்று அவற்றைப் பரிப்பெருமாள் பயன்படுத்துகின்றார். காமத்துப்பாலின் தொடக்கவுரையில், “இக் காமப்புணர்ச்சியை வடநூலாசிரியர் அராகத்தார் கூடும் கூட்டம் என்ப” என்றும், “இதற்கு இலக்கணம் வாத்ஸ்யாயனம் என்னும் காமதந்திரத்துச் சுதரவிகற்பம் என்னும் அதிகரணத்துள் கண்டு கொள்க” என்றும் கூறுகின்றார். பொருட்பாலில் பல அரசியல் நூலின் கருத்துக்களைக் குறிக்கின்றார். தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்தில் துரோணர் மதம் (503), கௌடிலியர் மதம் (504), நாரதர் மதம் (505), பராசரர் மதம் (507), வியாதன் மதம் (508), உத்தவாசாரியார் மதம் (510) என்று அரசியல் நூற்கொள்கைகளைக் குறிப்பிடுகின்றார். கதைகள் குற்றங் கடிதல் என்னும் அதிகாரத்தில் பல கதைகளைக் கூறிக் கருத்துகளை விளக்குகின்றார். அவை பின்வருமாறு: “பிறர்மனை நயத்தலால் கெட்டான் இராவணன்; வெகுளியால் கெட்டான் சனமேயன்; நுகர்ச்சியால் கெட்டான் சச்சந்தன்” (431). “மாண்பு இறந்த மானமாவது தொடங்கின வினை, நன்மை பயவாதாயினும் அதனைவிடாது ஒழிதல். இதனால் கெட்டான் துரியோதனன். மாணா உவகையாவது, எளியாரை |