அடர்க்கையால் பிறந்ததொரு மகிழ்ச்சியால் வலியார்மட்டும் செல்லுதல். இதனால் கெட்டான் வாதாபி” (432.) “இது பிறர் பொருளை விரும்பினால் வரும் குற்றம் கூறிற்று. இதனால் கெட்டான் புரூரவா” (437) “எல்லா நாளும் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாது ஒழிக. இதனால் கெட்டான் கார்த்த வீரியார்ச்சுனன்” (439). “வத்தராயன் யானை பிடிக்கப்போய்ச் சிறைப்பட்டான்” (440). உலகியல் அறிவு பரிப்பெருமாள், தம் காலத்துப் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்துள்ளார். உலகியலை அறிந்து போற்றித் தம் உரையில் கூறுகின்றார். குடிசெயல் வகை என்னும் அதிகாரத்தில், ‘அமரகத்து’ என்னும் குறள் உரையில் (1027), “இஃது ஒரு குடிப்பிறந்தார் பலர் உளர் ஆயினால் அவருள் மூத்தவருக்குக் கடனோ, எல்லார்க்கும் கடனோ என்று ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது” என்று கூறுகின்றார். இவர் சுற்றத்தழால் என்னும் அதிகாரத்தில் தம் காலத்துச் சமுதாய அமைப்பினையும் குலமுறைக் கோட்பாடுகளையும் குறிப்பிடுகின்றார். அவற்றைக் கீழே காண்போம்: “பிள்ளைகளை வேறு வேறு இடத்து நிறுத்தவேண்டும் என்பது சில ஆசாரியர் மதம். அதனை மறுத்து, மக்களை ஓரிடத்தே கொண்டிருக்க வேண்டும் என்பதூஉம், அதனானே குலம் வளரும் என்பதூஉம் கூறிற்று” (522). “மக்கள் பலர் உண்டானால் எல்லார்க்கும் பகுத்து உண்ணக் கொடுக்க வேண்டும்” (527). “மக்கள் பலர் உண்டானால் எல்லாரையும் ஒக்கப்பாராது நீதிமான் ஒருவனை இளவரசு ஆக்க வேண்டும்” (529). “இது, விட்டுப்போன புத்திரனைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று” (529). “இது, மீண்டுவந்த இராஜ புத்திரனோடு செய்யும் திறன் கூறிற்று” (530). |