5 பரிமேலழகர் 1. வரலாறு பரிமேலழகர் என்னும் அழகிய பெயரைத் தாங்கியவர். சிறந்த தமிழ் நூலாகிய திருக்குறளுக்கு உரை இயற்றிப் பெருமையுடன் விளங்குகின்றார். பரிமேலழகர் என்ற பெரிதும் வழங்கும் பெயரைப் பரிமேலழகியார், பரிமேலழகியன், பரிமேலழகரையன் என்று பலவாறு வழங்குகின்றனர். சிவஞான முனிவர் இவரைப் பரிமேலழகியார் என்றே குறிப்பிடுகின்றார். ரா. இராகவ ஐயங்கார் ‘பரிப்பெருமாளைப் பரி என்று கொண்டு அவரினும் உரை வன்மையான் அழகு உடையர் ஆதலால், பரிமேலழகர் எனப்பட்டாரோ என்று ஊகிக்க இடமுண்டு’ என்று கூறுவது* கேட்பதற்கு இனிமையாய் உள்ளதே ஒழிய உண்மையை வெளிப்படுத்துவதாய் இல்லை. பரிமேலழகர் என்ற பெயர் திருமாலுக்கு உரியது. திருமால் பரிமேல் அழகராயும், யானைமேல் அழகராயும் எழுந்தருளுவது இன்றும் வைணவக்கோயில் விழாக்களில் உண்டு. வாழ்ந்த இடம் பரிமேலழகர் மதுரையில் வாழ்ந்தவர் என்று சிலரும், காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர் என்று சிலரும் கூறுகின்றனர். இருவேறு கருத்தினரும் தம் தம் கருத்திற்குச் சான்றுகள் காட்டுகின்றனர். பெருந்திரட்டில் உள்ள செய்யுள் ஒன்று (பெருந். 1547) பரிமேலழகரைக் ‘கலைதேர் ஒக்கைக் காவலன்’ என்று குறிப்பிடுகின்றது. ஒக்கை என்பது ஒக்கூர் என்பதன் மரூஉ மொழி; அவ்வூர் பாண்டிய நாட்டில் உள்ளது. காவலன் என்று குறிக்கப்படுவதால், அரசியல் தலைவராய் இருந்திருக்கலாம். வேறொரு செய்யுள் (பெருந். 1548) ‘போற்று தமிழ்க் கூடற் * சேதுநாடும் செந்தமிழும் - பக்.16 (1928). |