பக்கம் எண் :

381ஆய்வு

உலகையும் அளந்த இறைவன்’ என்று பொருள் கூறி, தாம் திருமாலுக்கு
அன்பர் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

     தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு (1103), ‘துறந்த யோகிகள்
எய்தும் செங்கண்மால் உலகம்’ என்று பொருள் கூறுகின்றார். ‘இந்திரன்
உலகு என்று உரைப்பாரும் உளர்; தாமரைக் கண்ணான் என்பது அவனுக்குப்
பெயர் அன்மையின், அஃது உரையன்மை அறிக’ என்று பிறர் கருத்தை
மறுத்து, வைணவ சமயப்பற்றைக் காட்டுகின்றார்.

     நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலிருந்து பல மேற்கோள்களைக்
காட்டுகின்றார்.

     ‘பற்றற்ற கண்ணே’ என்னும் குறள் உரையில் (349) ‘அற்றது பற்றெனில்
உற்றது வீடு’ என்னும் திருவாய் மொழியை (1, 2, 5)க் காட்டுகின்றார்.

     ‘ஆரா இயற்கை’ என்ற குறள் உரையில் (370) ‘நன்றாய் ஞானம்
கடந்துபோய்’ என்ற திருவாய் மொழிப்பாடல் (78-6) முழுவதையும்
மேற்கோள் தருகின்றார்.

     பொருட்பால் இறைமாட்சியின் தொடக்கத்தில், “திருவுடை மன்னரைக்
காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்று பெரியாரும் பணித்தார்”
என்று நம்மாழ்வார் பாடலை (4-4-8) நினைவூட்டுகின்றார்.

     இவை யாவும் பரிமேலழகர் வைணவ சமயத்தினர் என்பதை
உணர்த்தும் சான்றுகளாகும்.

காலம்

    உமாபதி சிவாசாரியார், ‘வள்ளுவர்சீர்’ என்னும் வெண்பாவில்,
‘பரிமேலழகர் செய்தவுரை’ என்று இவர் உரையைக் குறிப்பிடுகின்றார்.
உமாபதிசிவனார், சங்கற்ப நிராகரணம் என்ற நூலை 1313-ஆம் ஆண்டில்
இயற்றினார். ஆதலின் பரிமேலழகர் இக்காலத்திற்கு முற்பட்டவர்.

     காமத்துப்பாலின் முன்னுரையில், “வடநூலுள் போசராசனும் ‘சுவை பல
என்று கூறுவார் கூறுக; யாம் கூறுவது இன்பச்சுவை ஒன்றனையுமே’ என
இதனையே மிகுத்துக் கூறினான்” என்று கூறுகின்றார். இங்கே கூறப்பட்ட
போசராசன் ‘சிருங்காரப் பிரகாசம்’ இயற்றிய காலம், 11-ஆம் நூற்றாண்டின்
முற்பகுதி.

     நன்னூலார் படைத்து வழங்கிய ‘ஒருபொருட் பன்மொழி’ என்னும்
அழகிய தொடரைத் தம் உரையில் இரண்டு இடங்களில்