பக்கம் எண் :

உரையாசிரியர்கள்382

(571, 863) பரிமேலழகர் எடுத்தாளுகின்றார். ஆதலின் நன்னூலாருக்குப்
பிற்பட்டவர்.

     சேனாவரையர் (கி.பி. 1276) கருத்தைப் பரிமேலழகர் தழுவி,
வானோக்கி வாழும்குடி, (542) என்ற குறளுக்கு உரை கூறுகின்றார் (சொல்
- 93), சொல்லெச்சத்திற்கும் சேனாவரையர் கருத்தையே தழுவியுள்ளார்
(சொல் - 441, குறள் - 10, 37). ஆதலின், சேனாவரையருக்குப் பிற்பட்டவர்
பரிமேலழகர்.

தலைமையோன்

    பரிமேலழகர் உரைச் சிறப்புப்பாயிரம்,

    வடநூல் துறையும் தென்திசைத் தமிழும்
    விதிமுறை பயின்ற நெறியறி புலவன்
    அன்பு அருள் நாண் ஒப்புரவு கண்ணோட்டம்
    நன்றறி வாய்மை நற்றவம் உடையோன்
    இத்தகை யன்றி ஈசனது அருளால்
    உய்த்துணர் வுடையவோர் அருளால்
    பரிமே லழகன் எனப்பெயர் படைத்துத்
    தரைமேல் உதித்த தலைமை யோனே

என்று புகழ்கின்றது. இங்கே கூறப்படும் புகழுரைகள் யாவும் பரிமேலழகர்
பெருமையை நன்கு உணர்ந்து கூறப்பட்டவையாகும்.

2. திருக்குறள் உரை

     தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, திருமலையர், மல்லர்,
பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஒன்பது உரையாசிரியர்களுக்கும்
காலத்தால் பிற்பட்டவர் பரிமேலழகர். இச் செய்தி,

    செவ்வி முப்பாலுக்கு
    ஓர்உரை யின்றி ஒன்பது சென்றும்
    ஐயுற வாக நையுறு காலை
    ... குறட்பாத் தமிழ்மனு நூலிற்கு
    விழுப்பொருள் தோன்ற விரித்தினிது உரைத்தனன்
    பரிமேலழகன் எனப்பெயர் படைத்துத்
    தரைமேல் உதித்த தலைமை யோனே

என்று உரைப்பாயிரம் கூறுவதால் வெளிப்படுகின்றது.