பக்கம் எண் :

383ஆய்வு

காலம் தந்த வாய்ப்பு

    பரிமேலழகர் தமக்குமுன் தோன்றிய ஒன்பது உரைகளையும் கற்கும்
வாய்ப்புப் பெற்றார். எல்லா உரைகளிலும் உள்ள நல்ல இயல்புகளை
அறிந்தார். ஒவ்வொரு உரையிலும் காணப்பட்ட குறை நிறைகளை
உணர்ந்தார். இதன் பயனாய் நல்லனவற்றை மேற்கொண்டு குற்றங்குறைகளை
நீக்கி, சிறந்த உரை காணும் வாய்ப்பு உண்டாயிற்று.

     பரிமேலழகர்க்கு முற்பட்ட உரையாசிரியர் ஒவ்வொருவரிடமும்
ஒவ்வொரு சிறப்பியல்பு காணப்படுகின்றது. பாலின் தொடக்கத்தில் எழுதும்
விரிவுரை, இயல்பற்றிய ஆராய்ச்சியுரை, அதிகாரம் தோறும் எழுதும்
முன்னுரை, அதிகார வைப்பு முறை பற்றிய விளக்கம், அதிகாரத்திற்குள்
குறட்பாக்களைப் பொருள் தொடர்போடு தொகுத்து நோக்குதல்
ஆகியவற்றைப் பரிமேலழகர் நமக்கு முற்பட்ட உரையாசிரியர்களிடமிருந்து
பெற்றார்.

     மணக்குடவர் ஓர் அதிகாரத்திற்குள் குறட்பாக்களைப் பொருள்
தொடர்போடு தொகுத்து நோக்குகின்றார். பரிமேலழகர் இம்முறையை
மேற்கொண்டு புதுவிளக்கம் சில காணுகின்றார். காலிங்கர் அதிகாரம் தோறும்
பத்தாவது குறளின் இறுதியில் அடுத்து வரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாய்
கூறுகின்றார். பரிமேலழகர் இம்முறையைச் சிறிது மாற்றி அதிகாரத்தின்
தொடக்கத்தில் முறை வைப்புப் பற்றி ஆராய்ச்சி நிகழ்த்துகின்றார். இவ்வாறு
ஒவ்வொரு உரையிலும் காணப்படும் நல்லனவற்றை எல்லாம்
மேற்கொள்ளுகின்றார் பரிமேலழகர்.

     குறட்பாவுக்கு உரைஎழுதும் போதும், ஏனைய உரைகளை
நினைவில்கொண்டே உரை எழுதுகின்றார்.  பிறர் கொண்ட வேறு
பாடங்களைக் குறிப்பிடுகின்றார். பொருத்தமற்ற பாடங்களை விலக்குகிறார்.
தவறான உரையைக் காரணங்குறி மறுக்கின்றார். தமக்கு உடன்பாடு இல்லாத
கருத்துகளைச் சுட்டிச் செல்லுகின்றார். மாறுபட்ட கொள்கையை மதிக்கின்றார்.
போற்றத்தகுந்த வேறுபாடுகளைப் போற்றுகின்றார்.

     எல்லா உரையாசிரியர்கள் கருத்தையும் நெஞ்சத்தில் நிறுத்தி, உரை
எழுகின்றார் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன.

    இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலன்உடையான் கண்ணே உள
                                   (குறள் - 223)