பக்கம் எண் :

385ஆய்வு

என்பார் ‘உப்பக்கம் காண்பர்’ என்றார்” என்று தெளிவுபடுத்துகின்றார்.

      இகல்வெல்லும் வேந்தற்கு வேண்டும்பொழுது        (481)

என்ற கருத்தும்,

      குடி செய்வார்க்கு இல்லை பருவம்                (1028)

என்ற கருத்தும் முரண்பட்டவை அல்ல என்பதைப் பரிமேலழகர்,
“இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481) என்றது உட்கொண்டு
இவர்க்கும் வேண்டுமோ என்று கருதினும் அது கருதற்க என்று மறுத்தவாறு”
என்று விளக்குகின்றார்.

      மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு             (396)

என்ற கருத்து,

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்                    (373)

என்ற கருத்துடன் மாறுடுவதுபோல் தோன்றுவதை அறிந்து, “இஃது ஊழ்
மாறுகொள்ளாவழியாகலின் மேல் உண்மை அறிவே மிகும் என்றதனோடு
மலையாமை அறிக” என்று உரைக்கின்றார் (396).

    தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
    நீங்கா நிலன்ஆள் பவர்க்கு                 (383)

என்பதும்,

      தூங்குக தூங்கிச் செயற்பால                 (672)

என்பதம் மாறுபாடு உடையவைபோல் உள்ளதை உணர்ந்து, “மேல்
தூங்காமை என்றார் (383) ஈண்டு அதனைப் பகுத்துக் கூறினார் (672)”
என்று உரைக்கின்றார்.

     இத்தகைய அரிய விளக்கம் பல தந்த பரிமேலழகரை,

    திருவள்ளுவர் தம் கருத்தமைதி தானேகருதி
    விரித்து உரைத்தான்
                                       (பெருந் - 1544)

என்று புலவர்கள் போற்றுவர்.

உலகியல் அறிவு

    பரிமேலழகர் உலக மக்களிடையே நன்கு பழகி, அவர்களின் பேச்சு,
பழக்கவழக்கம் ஆகியவற்றை அறிந்திருக்கின்றார்.

     மக்களைக் ‘பகைவர், நட்டார், நொதுமலர்’ என மூன்றாகப்
பிரிக்கின்றார் (752).