பக்கம் எண் :

387ஆய்வு

வடநூல் முறையை மறுத்து, ‘உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது
நிலையுடைமையையும் தூக்கி அவை செய்யற்க என்பதாம்’ என்று இவர்
கூறுவது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

     ‘ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்’ (656) என்னும் குறள்உரையில்,
“இறந்த மூப்பினராய இரு முது குரவரும் கற்புடை மனைவியும் குழவியும்
பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக’
என்னும் அறநூற் பொருள் நூல்வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு
உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கும் எய்தாமைபற்றி
இவ்வாறு கூறினார்” என்று எழுதுகின்றார்.

தமிழ் நடை

     இவரது உரையின் தனிப்பட்ட நற்பண்புகளில் ஒன்று தீந்தமிழ் நடை.
உரைநடையில் இவர்க்கு ஒப்பான செறிவு இனிமை தெளிவு நயம்
ஆகியவற்றின் இணைப்பை வேறு எவரிடத்தும் நாம் காண இயலாது.
செய்யுளில் திருக்குறளுக்கு உள்ள சிறப்பியல்புகளை எல்லாம், உரை
நடையில் பெற முயன்ற இவர் வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளுவருடன்
போட்டியிட்டு, திருவள்ளுவர் நடையை - சொற்செறிவை - இனிமையை -
கருத்து ஆழத்தைப் பெற்றுள்ளார்.

     கருத்தளவில் சில இடங்களில் வடமொழிச் சார்பாக இருக்கின்ற இவர்,
சொல் நடையில் வியக்கத்தக்க முறையில் சீரிய தனித்தமிழ் நடையைப்
படைத்துள்ளார்.

முன்னோர்மொழி

    நயமான பாடல்களின் அடியை, உரைநடையில் எழுதிச் செல்வது
பரிமேலழகர் இயல்பு. அத்தகைய இடங்களில் சில காண்போம்:

     64. சிறுகையான் அளாவலாவது, இட்டும் தொட்டும் கௌவியும்
துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்படி விதிர்த்தல் (புறம் - 188)

     110. பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், குரவர்த்தபுதலும் (புறம் - 33).

     425. கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப்போல ஒரு நிலையே
நட்பாயினான் எல்லா இன்பமும் எய்தும் (நாலடியார்).

     970. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா
வானவூர்தி எய்துவர் (புறம் - 27).