1109. இருதலைப் புள்ளியின் ஓருயிராய உழுவல் அன்பு (அகம்). 1120. பாத்தி அன்ன குடுமிக் கூர்ங் கற்களை உடைய வெஞ்சுரத்தை (அகம் - 5). 1099. மது மறைந்து உண்போர் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின் (இறையனார் - 8 உரை மேற்). சான்று காட்டுதல் திருக்குறளில் உள்ள சொற்களுக்குத் தாம் கொள்ளும் பொருள் முன்னோர் பாடல்களில் அவ்வாறே உள்ளது என்பதற்குத் தக்க சான்று காட்டி நிறுவுவது பரிமேலழகரின் வழக்கம். அத்தகைய இடங்கள் கீழே தரப்படுகின்றன. 580. நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல். முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் (நற் - 355) என்பதனாலும் அறிக. 899. வேந்தனும் வேந்து கெடும் - இந்திரனும் இடையே தன்பதம் இழந்துவிடும். ‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’ (தொல். பொருள் - 5) என்றார் பிறரும். 1182. என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ‘வேலன் கூந்தன்மா இவர்ந்து செல்ல’ (சீவக விமலை - 1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல் அறிக. 1165. துப்பின் எவன் ஆவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வார் கொல்லோ. துப்புப் பகையும் ஆதல், ‘துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையான்’ (புறம் - 380) என்பதனாலும் அறிக. திருக்குறளைச் சான்று காட்டுதலும், மேற்கோள் தருதலும், உரைநடையாக்கி எழுதுதலும் இவரது வழக்கம் (135,161, 263, 305, 457, 755, 955, 971, 972). உவமை கூறுதல் தம் உரையில் பல உவமைகளைக் கூறி, கருத்தை விளக்குகின்றார். இனிய கனிகள் என்றது, ஒளவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தானவற்றை; இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை (100). இந்திரன் போல எல்லாப் பொருளையும் இழந்து சிறுமை எய்தல் (144). |