பக்கம் எண் :

389ஆய்வு

     விறகு பெற்ற தழல்போல் (343).

     காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் (360)

     கரும்பு அயிறற்குக் கூலிபோல (399).

     ஏரல் எழுத்துப் போல்வதோர் விழுக்காடு (404).

     மழைத்துளிபோல வந்து ஈண்டி (416).

     குதிரையை நிலமறித்து செலுத்தும் வாதுவன்போல (422).

     கயப்பூப்போல வேறுபடாது, கோட்டுப்பூப்போல ஒரு நிலையே
நட்பாயினான் (425).

     தானே கெடுதலாவது, பாகன் இல்லாத யானைபோல நெறியல்லா நெறி
சென்று கெடுதல் (448).

     புலியை அடைந்த புல்வாய் இனம் போன்று (571).

     கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போல (693).

     இத்தகைய அரிய உவமைகள் இன்னும் சில இடங்களிலும் (741, 797,
900) உள்ளன.

தமிழிலக்கியப் புலமை

    பரிமேலழகர் தமிழிலக்கியங்களை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்து தெளிந்த
புலமை பெற்றுள்ளார். தாம் கற்ற நூல்களிலிருந்து கணக்கற்ற
மேற்கோள்களைத் தருகின்றார்.

     அகநானூறு (210), பதிற்றுப்பத்து (432), நற்றிணை (401), பத்துப்பாட்டு
(811, 1033, 1144) நான்மணிக்கடிகை (121), (556) ஆகிய பழந்தமிழ்
நூல்களிலிருந்து மேற்கோள் தருகின்றார்.

     சீவகசிந்தாமணியிலிருந்து சில மேற்கோள்களைத் தருகின்றார் (384, 514,
771). பெரிய புராணக் கருத்து ஒரு குறளின் உரையில் இடம் பெற்றுள்ளது
(442). இராமாயணக் கருத்து மற்றோர் குறள் உரையில் வருகின்றது (773).

     சில இடங்களில் பழங்கதைகள் இடம்பெறுகின்றன. மகனை முறை
செய்தான், தன் கை குறைத்தான் (547), பாண்டவர் (935), நகுடன் (899),
திரிபுரம் எரித்தான் (900) ஆகியோருடைய வரலாறு ஆங்காங்கே
சுட்டப்படுகின்றன.

     திருவாய்மொழி (349, 570), முத்தொள்ளாயிரம் (576), திருக்கோவையார்
(277) ஆகிய இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.