இலக்கணப் புலமை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணங்களிலும் புலமை நிரம்பியவர் பரிமேலழகர். இலக்கணப் புலமை வெளிப்படும் வகையில், திருக்குறளுக்கு உரைகண்ட சிறப்பை, பொழிப்பு அகலத்தோடு நுட்பம் எச்சம் விழுப்பொருள் தோன்ற விரித்துஇனிது உரைத்தனன் (பெருந் - 1543) என்று பாராட்டுவர். அசைநிலை, ஆகுபெயர், வினைஎச்சத் திரிபு, தொகை மொழிகள், உருபு மயக்கம், வேற்றுமை, இடைச்சொல் ஆகியவற்றை நினைவூட்டி எழுதும் இடங்கள் பலவாகும். ‘யா என்பது அஃறிணைப் பன்மை வினாப் பெயர்’ என்றும் (127), பயனில் சொல் (196) என்னும் குறளில் உள்ள எனல் என்பதில் உள்ள ‘அல் விகுதி வியங்கோள் முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது’ என்றும் பரிமேலழகர் எழுதித் தம் இலக்கணப் புலமை மாண்பை வெளிப்படுத்துகின்றார். இலக்கணை என்னும் இலக்கணம் வரும் இடங்களை நன்கு ஆராய்ந்து இலக்கணை வழக்கு (272). இலக்கணைக் குறிப்பு (1115). இலக்கணைச் சொல் (1186) என்று தெளிவுபடுத்துகின்றார். மேலும் குறிப்பு மொழி, (1029) குறிப்பு உருவகம் (1030) என்று இவர் சுட்டும் இடங்கள் மிக நுண்ணியவையாகும். அகப்பொருள் இலக்கணத்தைக் காமத்துப்பாலில் நன்கு பொருத்திக்காட்டி நயமாகப் பொருள் எழுதுகின்றார். அங்கே உள்ள ஒவ்வொரு இயலிலும் அதிகாரத்திலும், குறட்பாவிலும் அகப்பொருள் இலக்கணம் நன்கு பொருந்தி, குறட்பாக்களைத் தெளிவுபடுத்துகின்றது. புறப்பொருள் இலக்கணம் வெளிப்படும் இடங்களை, படைச்செருக்கு, படைமாட்சி ஆகிய இரண்டு அதிகாரங்களிலும் காணலாம். நெடுமொழி வஞ்சி (771), தழிஞ்சி (773), நூழிலாட்டு (774) என்று இவர், புறப்பொருள் துறைகளைக் குறிப்பிட்டு உரை எழுதுகின்றார். அணி இலக்கணத்தை இவர், நினைவூட்டும் இடங்கள் பல உண்டு. |