உருவகம், ஏகதேச உருவகம், பிறிது மொழிதல் (நுவலா நுவற்சி, ஒட்டு) எடுத்துக்காட்டு உவமை. சொற்பொருள் பின்வருநிலை, சொற்பின் வருநிலை ஆகியவற்றை மறவாமல் தம் உரைகளில் காட்டிச் செல்லுகின்றார். தொல்காப்பியச் சூத்திரங்களை 3, 402, 899, 960, 1043 ஆகிய குறள் உரைகளில் எடுத்தாளுகின்றார். 86, 183, 457 ஆகிய குறள் உரைகளில் இடவழுவமைதி என்று தொல்காப்பிய விதி கருதியே கூறுகின்றார். நன்னூலார் தம் இலக்கணத்தில் அமைத்துத் தந்த ‘ஒரு பொருட்பன்மொழி’ என்ற அழகிய இலக்கணத் தொடரை 863-ஆம் குறள் உரையில் எடுத்தாளுகின்றார். வடமொழிப் புலமை பரிமேலழகரை உரைச் சிறப்புப்பாயிரம், வடநூல் துறையும் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன் (பெருந் - 1543) என்று பாராட்டுகின்றது. வடமொழியில் உள்ள இலக்கணம் இலக்கியம், சமய நூல் ஆகியவற்றின் கருத்தை அறிந்து, தம் உரையில் பரிமேலழகர் கூறுகின்றார். இசை எச்சத்தை வடநூலார் ‘காகு’ என்பர் என்றும் (1318) பிறன் மனைவிழைந்து ஒழுகுதலைப் பரகீயம் என்பர் என்றும் (141) நினைவுபடுத்துகின்றார். குடங்கம் என்னும் வடசொல் குடங்கர் என்று திரிந்தது என்பது இவர் கருத்து (890). வட நூலார் கூறும் அற உபதை, பொருள் உபதை, இன்ப உபதை, அச்ச உபதை ஆகியவற்றை விளக்கி, பொருட்பாலில் சில இடங்களில் நினைவுபடுத்தி உரை எழுதுகின்றார் (501, 693). வடமொழியில் உள்ள அறம் பொருள் இன்பம் பற்றிக் கூறும் நூல்களை ஆங்காங்கே பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். அறம் “இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்” (240). |