பக்கம் எண் :

உரையாசிரியர்கள்394

வழிகள் ஆகியவற்றைப் பரிமேலழகர் விளக்குவதனைக் காணலாம்.

     ‘பல் குழுவும்’ (735) என்ற குறளின் விளக்கவுரையில் உட்பகை
என்பதற்கு, “ஆறலைப்பார் கள்வர் குறளை கூறுவார் முதலிய மக்களும்,
பன்றி புலி கரடி முதலிய விலங்குளும்” என்று விளக்கம் தருகின்றார்.

     ‘உறுபொருளும்’ (756) என்ற குறளுரையில், ‘உறு பொருள் வைத்தார்
இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின் கண்ணே கிடந்து பின்
கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉம் ஆம்’ என்ற விளக்குகின்றார்.

     ‘தார் தாங்கி’ (767) என்ற குறளின் விளக்கத்தில் படை வகுப்பாகிய
வியூகத்திற்கு நல்ல விளக்கம் தருகின்றார்.

சமய நூலறிவு

    அறத்துப்பால் உரை, பரிமேலழகர், பரந்த சமய நூலறிவு பெற்றவர்
என்பதை விளக்குகின்றது. சாங்கிய நூல் (27), ஆருகதர் சமயக்கொள்கை
(286) ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார். சமயம் பற்றிய பொதுவான
கருத்துக்களை 21, 351, 355, 358, 338, 360 ஆகிய குறட்பாக்களின்
உரைகளில் படித்து இன்புறலாம்.

வான் புகழ்

    திருக்குறளுக்குப் பத்தாவது உரையாகத் தோன்றிய பரிமேலழகர் உரை
மற்ற உரைகளைவிடச் செல்வாக்குப் பெற்றுப் பரவியது; ஏனைய உரைகளுக்கு
இல்லாத பெருமை ஏற்பட்டது.

    பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
    நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ - நூலில்
    பரித்தவுரை எல்லாம் பரிமே லழகன்
    தெரித்தவுரை யாமோ தெளி

என்று கற்றவர் போற்றும் சிறப்பை அவ்வுரை பெற்றது.

     திருவள்ளுவரைப் போலவே பரிமேலழகர் மதிக்கப்பட்டார்;
திருவள்ளுவரின் உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உணர்ந்த பெரும்புலவராக
அவர் கருதப்பட்டார்.

    வள்ளுவன் மீளவும் வந்துஉதித்து உலகோர்க்கு
    உள்ளிய பொருளை உரைத்தனன் என்ன ...
    விழுப்பொருள் தோன்ற விரித்துஇனிது உரைத்தான் ...
    பரிமே லழகன் எனப்பெயர் படைத்துத்
    தரைமேல் உதித்த தலைமை யோனே.