பக்கம் எண் :

395ஆய்வு

    திருத்தகுசீர்த் தெய்வத் திருவள் ளுவர்தம்
    கருத்தமைதி தானே கருதி - விரித்துரைத்தான்
    பன்னு தமிழ்சேர் பரிமே லழகன் எனும்
    மன்னு முயர்நாமன் வந்து
   
    தெய்வப் புலமைத் திருவள் ளுவர்குறளில்
    உய்விக்கும் நூலெல்லாம் உள்ளதெனச் - செய்வித்தான்
    தத்துவம்எல் லாம்உடம்பில் தந்துணர்வார் போல்உலகம்
    ஒத்தபரி மேலழகன் ஓர்ந்து.

என்று பல பாடல்களால் பரிமேலழகரைப் புலவர்கள் சிறப்பித்தனர்.

     பரிமேலழகர் உரை தனிப்பெரும் நூலாக, திருக்குறளோடு ஒத்த
சிறப்புடையதாக எண்ணப்பட்டது.

    வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
    தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளியசீர்த்
    தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
    தண்டமிழின் மேலாம் தரம்

என்று உமாபதி சிவனார் போற்றுகின்றார்.

     காலம்தோறும் கற்றவர் போற்றும் சிறப்பைப் பெற்று வந்த பரிமேலழகர்
உரை, இக் காலத்திலும் அறிஞர்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

     “திருக்குறளின்  பெருமையை ஆராய்ந்து அதன் கருத்துக்களை
நுட்பமாக உணர்ந்து, அதற்கு ஓர் அரிய உரை இயற்றி அதன் புகழை
வளர்த்தவர் பரிமேலழகர்”.1

     “திருவள்ளுவரது திருக்குறள், பரிமேலழகியாரது உரையாகிய
புணையைக் கொண்டுதான், இடைக்காலமாகிய கருங்கடலைக் கடந்து நம்
காலம் எனும் கரைக்குச் செவ்வனே வந்து சேர்கின்றது”.2

     “திருவள்ளுவர் ஏடும் அதற்குரிய பரிமேலழகர் உரையும் இரண்டுமே
தத்தம் கட்டுக்கோப்புடையவையாய் அமைந்துள்ளன. இதுநாள்வரை
திருவள்ளுவரின் கட்டுக்கோப்புக்கு ஒப்பான கட்டுக்கோப்புடன் கட்டி
எழுதப்பட்ட ஒரே உரை, பரிமேலழகர் உரைதான் என்று கூற வேண்டும்”.3

     அபிதான கோசம் இவரது புலமை மாண்பைப் பின் வருமாறு
போற்றியுரைக்கின்றது:


 

1. தமிழ்ச்சுடர் மணிகள் (1949) பக்கம் - 167 சு.வையாயுரிப்பிள்ளை.

2. வள்ளுவரும் மகளிரும் (1930) பக்கம் - 11. தெ.பொ.மீனாட்சி சுத்தரனார்.

3. கா. அப்பாதுரைப் பிள்ளை; ‘முப்பால் ஒளி’ - முதல் இதழ் - பக்கம். 44.