‘இவர் உரையிலே பொருள் வன்மையும், செஞ்சொற்சிறப்பும், இலக்கணங்களும் சாதுரியமும், விசேடவுரை தெரிக்கும் ஆற்றலும், மேற்கோள்எடு்த்துச் சிந்தாந்தம் செய்யும் உபாயமும், பிறர்க்கெல்லாம் பல வசனங்களான் அன்றி அமையாத விஷயங்களைச் சில சொற்கொண்டு தெற்றெனக் காட்டும் பேராண்மையும், வடமொழிப் பதங்களைச் செந்தமிழ் மொழியாக்கும் அற்புத சாமர்த்தியமும், சொன்முட்டுற்று வடமொழிப் பதங்ளை எடுத்தாளும் நல்குரவுடையார் போலாது செந்தமிழ்ச் சொற் செல்வமுடைமையும், வேதாகம வியாகரண சாத்திர புராண இதிகாச ஸ்மிருதி காவிய அலங்காராதி வடநூற்பயிற்சியோடு முத்தமிழ்ப் பரப்பெல்லாம் முற்றுணர்ந்ததிண் புலமையும் நன்கு பெறப்படுகின்றன’. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் திருக்குறளுக்கு உரைவகுத்த பரிமேலழகரின் பெருமையைத் தெரிந்துகொள்ள ஒரு வழி கூறுவார். “ஏதேனும் ஒரு குறளின் மூலத்தை மட்டும் தெரிந்துகொண்டு ஒரு மாதம் வரை ஆராய்ந்து அதற்கு உரை எழுதுங்கள். சொல் நயம், பொருள் நயம், என்பவற்றைத் தெளிந்து விரிவாக எழுதுங்கள்; அதன் பிறகு பரிமேலழகர் உரையைப் பாருங்கள். நீங்கள் எழுதாத எதேனும் ஒன்றையாவது அவர் நிச்சயம் சொல்லியிருப்பார். அப்போதுதான் அவர் உரையின் அருமை தெரியும்” என்பார். இத்தகைய புகழ் மொழிகள் பலவற்றைத் தாங்கி நிற்கின்ற இவரை, பருச்சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கி, பொருட்சொல் நிரப்பும் புலவர்* என்று நயந்து போற்றலாம். அறிஞர் பெருமக்களின் போற்றுதலைக் காலந்தோறும் பெற்றுவரும் பரிமேலழகரின் ஆற்றலும் அறிவும் அளவிடற்கு அரியவை. தனித் தமிழில் அமைந்த இலக்கிய நடை, திட்ப நுட்பம் வாய்ந்த அரிய விளக்கம், மூல நூலின் கருத்துச் செறிவுக்கு ஏற்ற முழுமைவாய்ந்த கட்டுக்கோப்பு ஆகியவை பரிமேலழகர் உரையின் சிறப்பியல்புகள் ஆகும். தம் காலத்தில் விளங்கிய தமிழ் இலக்கியம் அனைத்தையும் நுணுகிக் கற்று அவற்றின் கருத்துக்களை வடித்துக் கலைப்பண்பு கெழுமத் திருக்குறளை உரைவடிவில் அளித்துள்ள பரிமேலழகரது அருஞ்செயலின் பெருமை அளவிடற்கு அரியது. வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மிக்க பயிற்சியுடைய இவர் சிறந்த செந்தமிழ் * பெருங்கதை 2-4, (51, 52) |