பக்கம் எண் :

397ஆய்வு

நூலாகிய திருக்குறளுக்கும் அதன் தூய்மைக்கும் உயர்வுக்கும் ஏற்றவாறு
தெள்ளிய தூய தமிழில் நல்லுரை கண்டுள்ளார்.

உரையின் இயல்புகள்

    பரிமேலழகர் நூலின் தொடக்கத்தில் உரைப்பாயிரம் எழுதி, நூலின்
பொருட்பாகுபாடுகளை விளக்குகின்றார்; பால்தோறும் விரிவுரை தருகின்றார்;
இயல்களை ஆராய்கின்றார்; அதிகாரம் தோறும் தோற்றுவாய் கூறுகின்றார்;
முன் அதிகாரத்திற்கு இயைபு உரைக்கின்றார். பத்துக் குறள்களும்
கருத்துவகையால் பிரிந்து நிற்பதைக்காட்டி இன்ன பொருளை உணர்த்தின
என்கிறார்.

     குறட்பாக்களுக்குப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதி, பின்னர்
அருந்தொடரை விளக்குகின்றார். ஏட்டுப் பிரதிகளில் பொழிப்புரையே
உள்ளது என்றும், பதிப்பித்தவர்களே பதவுரையாக்கி வெளியிட்டனர் என்றும்
கூறுகின்றனர்.

     பொழிப்புரையில், அதிகாரத்திற்கு ஏற்பத் தேவையான சொற்களை
வருவித்தும், வேற்றுமை உருபு முதலிய இடைச் சொற்களை விரித்தும்
உரைக்கின்றார். பொழிப்புரையின் கீழ் எழுதும் விளக்கவுரையில் பல அரிய
ஆராய்ச்சிக் கருத்துக்களைக் கூறுகின்றார்; அருந்தொடரைத் தக்க
மேற்கோளுடன் விளக்குகின்றார்; உவமை காட்டியும், இலக்கியக் கதை
வரலாறு முதலியன தந்தும் அழகு செய்கின்றார். தேவையான இலக்கணக்
குறிப்புக்கள் தந்து தெளிவுபடுத்துகின்றார்; தமக்கு முன் இருந்த
உரையாசிரியர்கள் கருத்தைக் குறிப்பிடுகின்றார்; மாறுபட்ட கருத்தை
மறுக்கின்றார்; தவறான பாடத்தைக் கடிகின்றார். பொருத்தமானவற்றைப்
போற்றுகின்றார். வடமொழி, தமிழ் ஆகிய இருமொழி இலக்கியங்களிலிருந்தும்
கருத்துகளைக் கூறுகின்றார்; வட சொற்களைத் தமிழ்மொழிக்கு ஏற்ப மொழி
பெயர்க்கின்றார்; தமிழ் மரபையும் பண்பாட்டையும் நினைவூட்டுகின்றார்.

     இத்தகைய சிறப்பியல்புகள் பல வாய்ந்த பரிமேலழகர் உரை
‘விரித்தியுரை’ என்றும் வழங்கியது. சிறந்த உரை வழங்கிய பரிமேலழகரை,

    வள்ளுவன் மீளவும் வந்துஉதித்து உலகோர்க்கு
    உள்ளிய பொருளை உரைத்தனன் என்ன
    எழுத்து முதல இலக்கண வகையும்
    வழுத்து வேதாகம வகையதன் பயனும்
    தங்கிய குறட்பாத் தமிழ்மனு நூலிற்கு
    இதுவே உரைஎன்று யாவரும் வியப்பப்