பக்கம் எண் :

உரையாசிரியர்கள்398

    பொழிப்பு அகலத்தொடு நுட்ப எச்சம்
    விழுப்பொருள் தோன்ற விரித்தினிது உரைத்தனன்

என்று உரைப்பாயிரம் புகழ்கின்றது.

இலக்கண உரை

    பரிமேலழகர் உரையை இலக்கணவுரை என்று கூறுவதுண்டு. 1885-ஆம்
ஆண்டில், பரிமேலழகர் உரைக்கு விளக்கக் குறிப்புக்கள் எழுதிப் பதிப்பித்த
முருகேச முதலியார், ‘திருக்குறள் மூலமும் பரிமேலழகர் செய்த
இலக்கணவுரையும்’ என்று தலைப்பு இட்டு வெளியிட்டார்.

     பரிமேலழகரின் இலக்கணப் புலமை, அவர் உரை முழுதும்
வெளிப்படுகின்றது. பலவகை இலக்கணங்களை ஆங்காங்கே எடுத்துக்காட்டும்
இவர், பிற உரையாசிரியர்களை மறுக்கும் இடங்களில் கூட அவர்கள்
இலக்கணத்தை மறந்ததையும், அவர்கள் உரையில் இலக்கணப் பிழைகள்
இருப்பதையும் எடுத்துக்காட்டுகின்றார்.

    கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்                     (643)

என்ற குறளின் விளக்கவுரையில், “தகையவாய் என்பதற்கு எல்லாரும்
தகுதியுடையவாய் என்று உரைத்தார்; அவர் அப் பன்மை, மொழிவது
என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர்” என்று பிறர் உரைகளை
மறுக்கின்றார்.

    சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
    கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று               
     (660)

என்ற குறளின் கீழ், “பிறர் எல்லாம் ஏமாத்தல் என்று பாடம் ஓதி,
அதற்கு மகிழ்தல் என்றும், இரீஇயற்று என்பதற்கு வைத்தாற்போலும் என்று
உரைத்தார்; அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமை
இலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர்” என்று எழுதுகின்றார்.

     பரிமேலழகர் உரை, இலக்கணக் கொள்கைகளை நன்கு நெஞ்சில்
நிறுத்தி எழுதப்பட்டதாகும். அவ்வுரையில் இலக்கணப் பிழையையோ,
இலக்கணக் கொள்கைகளோடு மாறுபட்ட கருத்தையோ காண இயலாது.

     ஆதலின் இவர் உரையை இலக்கண உரை என்று கூறுவது மிகவும்
பொருத்தமாகும்.

குறள் பெற்ற புதுவிளக்கம்

    திருக்குறளைப் புதிய பார்வையுடன் கண்டவர் பரிமேலழகர். அதனால்
பல குறட்பாக்கள் புதிய விளக்கம்