பெற்றுள்ளன. அப்பாடல்களைப் பிறர் கூறுவதாக அமைத்துக் காட்டி அழகு செய்கின்றார். கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772) என்ற குறள், ‘மாற்றரசன் படையோடு பொருதானோர் வீரன், அது புறங் கொடுத்ததாக நாணி, பின் அவன் தன் மேற் செல்லலுற்றானது கூற்று’ என்கிறார் பரிமேலழகர். இக் கூற்றால் மேலே கண்ட குறள், புதிய விளக்கம் பெறுகின்றது. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு (1048) என்ற குறளை, ‘நெருதல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று’ என்று புதிய நோக்குடன் காண்கின்றார். மதியும் மடந்தை முகனும் அறியா பதியில் கலங்கிய மீன் (1116) என்ற குறளினை (தலைவன்) ‘இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது’ என்று கூறுகின்றார். திருக்குறளின் பொருளையும் பரிமேலழகரின் குறிப்பையும் இணைத்து நோக்கும்போதுதான், குறளின் பொருட்சிறப்பு நமக்கு நன்கு வெளிப்படுகின்றது. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120) என்பது பலர் அறிந்த குறள். இது, ‘உடன்போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது’ என்று உரைக்கின்றார் பரிமேலழகர். எவ்வளவு பொருத்தமான விளக்கம் இது! தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதுஆண்டு அவள்செய் தது (1279) என்ற குறளுக்குத் தம் புலமைத் திறம் அனைத்தும் வெளிப்படும் வகையில் பொருள் உரைக்கின்றார். “அவர் பிரிய யான் ஈண்டு இருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி, அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி, பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி, அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன்போக்காய் இருந்தது”. நோக்கு திருக்குறளில் உள்ள சில பாக்களுக்குப் பரிமேலழகர் ‘மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்கி’ நுண்பொருள் எழுதுகின்றார். குறட்பாவில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் |