இவர் பொருளாழம் வாய்ந்த உரை கூறிச் சிறப்பிக்கின்றார். அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்: செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (412) “சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ள பொழுது வெறுக்கப்படுதலான் ‘இல்லாதபோழ்து என்றும்’, பெரிதாயவழித் தேடல் துன்பமே அன்றி நோயும் காமமும் பெருகுதலான் ‘சிறிது’ என்றும், அதுதானும் பின் இருந்து கேட்டற் பொருட்டாகலான் ஈயப்படு்ம் என்று கூறினார். ஈதல் - வயிற்றது இழிவு தோன்ற நின்றது”, ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (837) “எல்லா நன்மையும் செய்து கோடற்கருவி என்பது தோன்ற ‘பெருங் செல்வம்’ என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற ‘உற்றக் கடை’ என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற ‘ஆர’ என்றும் உணவும் பெறாமை தோன்ற ‘பசிப்பர்’ என்றும் கூறினார்.” ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் (1069) “ஆ காத்து ஓம்பல் பேரறம் ஆகலின் ஆவிற்கு என்றும்; பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் நீர் என்றும்; இரக்கின்றவனுக்கு இளிவு அச்சொல் அளவே ஆகலின் ‘நாவிற்கு’ என்றும்; அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின் ‘இளி வந்தது இல்’ என்றும் கூறினார்.” இத்தகைய சிறப்பு வாய்ந்த உரைகள் (306, 334, 321, 727, 968, 1160, 1289) இன்னும் பல இடங்களில் உள்ளன. அவற்றைக் கற்போர் பரிமேலழகரின் உரைத் திறனை வியந்து போற்றுவர். உவமை விளக்கம் திருவள்ளுவர் கூறியுள்ள பல இனிய உவமைகள் பரிமேலழகர் உரையால், நன்கு பொருள் விளக்கம் அடைகின்றன. ‘ஒருமையுள் ஆமைபோல்’ (126) என்பதில் உள்ள உவமையினை இவர், “ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல, இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுத்தாமல் அடக்க வேண்டும் என்பார் ஆமை போல்’ என்றார்” என்று விளக்குகின்றார். ‘கொக்கு ஒக்க’ என்ற குறளில் (940) உள்ள உவமையின் பொருத்தத்தைப் பின்வருமாறு கூறிகின்றார். |