“மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும் துணையும் முன் அறிந்து தப்பாமல் பொருட்டு உயிர் இல்லது போன்று இருக்கும் ஆகலானும்; எய்திய வழிப் பின் தப்புவதற்கு முன்பே விரைந்து குத்தும் ஆகலானும்; இருப்பிற்கும் செயலிற்கும் கொக்கு உவமையாயிற்று.” நிலத் தியல்பால் நீர்திரிந் தற்றாகும் (452) என்ற உவமையை, “விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்தவழி நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனிநிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு பிற இனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும்” என்று பொருத்தமாக விரித்துரைக்கின்றார். தலையின் இழிந்த மயிரனையர் (964) என்ற உவமையை மிகச் சுருக்கமாக விளக்குகின்றார்; “நிலையைவிடாது நின்றவழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்”. இவ்வாறு சுருக்கமாக விளக்கும் பரிமேலழகர் இவ்வுவமையை மிக விரிவாகக் கூறும் ஆற்றல் உடையவர். எனினும் பல சொல்லி விளக்குவதை விரும்பாத சான்றோர் இவர் ஆதலின் சில சொல்லியே விளக்குகின்றார். அறைபறை அன்னர் கயவர் (1076) என்பது திருவள்ளுவர் கூறிய சிறந்த உவமை. “பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்தது ஒன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம்” என்பது பரிமேலழகரின் நல்ல விளக்கம். அறிதோறு அறியாமை கண்டற்றால் (1110) என்னும் உவமையின் சிறப்பு, “அறிவிற்கு எல்லை இன்மையான் மேன்மேல் அறிய அறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறுபோல” என்ற விளக்கத்தால் வெளிப்படுகின்றது. உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது (1326) இக்குறளில் உள்ள எடுத்துக்காட்டு உவமையின் பொருத்தம் பரிமேலழகரால் வெளிப்படுகின்றது. “பசித்து உண்ணும் வழி, மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அதுபோல அகன்று கூடும் வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம்”. காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு (125) |