இக்குறளில் உள்ள உருவகம் பின்வருமாறு பரிமேலழகரால் விளக்கப்படுகின்றது: “நாணுள்ள துணையும் நிறை அழியாது ஆதலின், அதனைத் தாழ் ஆக்கியும்; அகத்துக்கிடந்தன பிறர் கொள்ளாமல் காத்தலின் நிறையைக் கதவாக்கியும்; வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டினையும் ஒருங்கு நீக்கலின் தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினார்”. நயவுரை பரிமேலழகர் பல குறள்களுக்கு எழுதியுள்ள உரைநயம் மகிழ்ந்து கற்றுப் போற்றுதற்கு உரியதாகும். ‘மக்கட்பதடி’ என்ற தொடருக்கு, “அறிவு என்னும் உள்ளீடு இன்மையின் ‘மக்கட்பதடி’ என்றார்” என்று நயம்படப் பொருள் உரைக்கின்றார் (196). ‘தீயவை, தீயினும் அஞ்சப்படும்’ (202) என்பதற்குப் “பிறிதொரு காலத்தும் பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல், தீக்கு இன்மையின் தீயினும் அஞ்சப்படுவதாயிற்று” என்று எழுதுகின்றார். மருந்தாகித் தப்பா மரத்தற்றால் (217) என்னும் குறள் உரையில், “தப்புதலாவது கோடற்கு அரிய இடங்களில் நின்றாதல், காலத்தான் வேறுபட்டாதல் பயன்படாமை”. ‘ஒப்புரவினால்’ என்னும் குறளில் வரும்; ‘விற்றுக்கோள் தக்கது உடைத்து’ (220) என்ற பகுதி பரிமேலழகரால் நயம் பெருகின்றது. “தன்னை விற்றுக்கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே, இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி”. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் (394) என்ற குறளில் ‘உள்ளப் பிரிதல்’ என்பதற்கு “இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும் என நினையுமாறு நீங்குதல்” என்று இவர் எழுதுவது போற்றத்தக்கதாகும். கணைகொடிது யாழ்கோடு செவ்விது (279) என்ற அடியை, “அம்பு வடிவால் செவ்விதாயினும் செயலால் கொடிது; யாழ்கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது” என்று பொருள் எழுதி நன்கு விளக்குகின்றார். |